உதவி கேட்ட மாற்றுத்திறனாளி சிறுவன் ; வீடு கட்டி கொடுத்த தமிழக வெற்றிக் கழகத்தினர்
தமிழக வெற்றிக் கழகத்தின் சர்பில் மாற்றுத்திறனாளி சிறுவனின் குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுத்து, வீட்டு உபயோகப் பொருட்களையும் வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாற்றுத்திறனாளி சிறுவனின் குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுத்து, வீட்டு உபயோகப் பொருட்களையும் வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கி உள்ள நடிகர் விஜய் தொடர்ந்து, மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்வதில் கவனம் செலுத்த துவங்கி உள்ளார். அவரது அன்பு கட்டளைக்கு இணங்க தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை தெற்கு மாவட்ட இளைஞரணியினர், இலவச படிப்பகம், குருதிக்கொடை முகாம், சாலையோர மக்களுக்கு குளிர் கால போர்வை மற்றும் உணவு வழங்குவது போன்ற மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
கோவை சுந்தராபுரம் அருகே கோண்டி காலனி என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள கலோ என்பவர் தனது மனைவி வக்கா வல்லி மற்றும் பிரசாந்த் என்ற 7 வயது மாற்றுத் திறனாளி மகனுடன் வசித்து வருகிறார். அவர்கள் வீடு இன்றியும், போதிய அடிப்படை வசதிகள் இல்லாமலும் தவித்து வந்துள்ளனர். மேலும் மாற்றுத்திறனாளி சிறுவனை வைத்துக் கொண்டு அந்த குடும்பத்தினர் தங்க சரியான ஒரு இடம் இல்லாததால் தவித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் வீடு கட்டித்தர வேண்டி தமிழக வெற்றிக் கழகத்தினரிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதன் அடிப்படையில் தளபதி விலையில்லா வீடு வழங்கும் திட்டம் மூலம் வீடு கட்டி கொடுத்து, அரிசி, மளிகை என வீட்டு உபயோகப் பொருட்களையும் வழங்கியுள்ளனர். இதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பயனாளியிடம் வீட்டின் சாவியை வழங்கினார்.
வீட்டிற்கு தேவையான பொருட்களையும் அவர் வழங்கினார். கோரிக்கையை ஏற்று வீடு கட்டி தந்தும், வீட்டிற்கான பொருட்களையும் வழங்கிய தமிழக வெற்றி கழகத்தினருக்கு மாற்றுத்திறனாளி சிறுவனின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.