ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலைக்கு கொலை மிரட்டல் - சஷ்டி சேனா இந்து மக்கள் இயக்கத்தின் தலைவர் சரஸ்வதி கைது
சஷ்டி சேனா இந்து மக்கள் இயக்கத்தின் தலைவவர் சரஸ்வதி, காளி ஆவணப் படத்தின் போஸ்டருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார். அதில் லீனா மணிமேகலையை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்திருந்தார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை, தற்போது கனடாவின் டொரண்டோ பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் தனது 'காளி' என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். இதில் இந்துக் கடவுளான காளியின் வேடத்தில் ஒரு பெண் புகைப்பிடிக்கும் விதமாக காட்சிபடுத்தப்பட்டுள்ளது. மேலும், அதன் பின்னணியின் தன்பாலீர்ப்பாளர்களின் அடையாளமான வானவில் கொடியும் இடம்பெற்றுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த அஜய் கௌதம் என்பவர் இந்த போஸ்டர் தொடர்பாக டெல்லி காவல் துறையினரிடமும், மத்திய உள்துறை அமைச்சகத்திடமும் இயக்குநர் லீனா மணிமேகலை மீது வழக்குப் பதியவும், படத்தின் மீது தடை விதிக்கவும் புகார் அளித்துள்ளார். இவர் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் வலதுசாரி அமைப்பினர் பலரும் இயக்குநர் லீனா மணிமேகலையைக் கடுமையாக சாடி வருகின்றனர்.
ஒரு மாலைப்பொழுது, டோரோண்டோ மாநகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் படம். படத்தைப்பார்த்தா “arrest leena manimekalai” hashtag போடாம “love you leena manimekalai” hashtag போடுவாங்க.✊🏽 https://t.co/W6GNp3TG6m
— Leena Manimekalai (@LeenaManimekali) July 4, 2022">
இந்நிலையில் கோவை சொக்கம்புதூர் பகுதியை சேர்ந்த சஷ்டி சேனா இந்து மக்கள் இயக்கத்தின் தலைவவர் சரஸ்வதி, காளி ஆவணப் படத்தின் போஸ்டருக்கு கடும் கண்டனம் தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் லீனா மணிமேகலையை ஆபாசமாக பேசியதோடு, கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார். அந்த வீடியோவில் பேசும் சரஸ்வதி, மணிமேகலையை இழிவான வார்த்தைகளால் கடுமையாக வாசைபாடி சாவல் விடுத்தும் பேசியுள்ளார். அதில், “காளி சிகரெட் பிடிக்கும் காட்சியை எடுக்க வேண்டும். இல்லையென்றால் சென்னையில் எங்கு இருந்தாலும் வந்து ஓட ஒட செருப்பு எடுத்து அடிப்பேன். இதனால் வரும் பிரச்னைகளை சந்திக்க தயார்.
இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்தால் தான் அடங்குவீர்கள். நான்கு நாட்கள் உனக்கு காலக்கெடு. இந்து கடவுள் அவதாரம் காளியின் ஆட்டத்தை பார்க்க போகுறியாய். நீ ஆரம்பித்து வைத்து விட்டாய். உனக்கு முடிவு நான் தான் செய்வேன். இதனால் என்ன விளைவு வந்தாலும் சந்திக்க தயார். நாங்க யார் என்பதை சென்னையில் முகாமிட்டு பதிலடி தர தயார். காளி அவதாரம் எடுத்து ஆட்டம் ஆடுவேன். நீயா, நானா என்பதை பொறுத்திருந்து பார்” என்று பேசியுள்ளார்.
சமூக வளைதளங்களில் இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில், செல்வபுரம் காவல் துறையினர் சரஸ்வதி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வகுமார் அளித்த புகாரின் பேரில் சரஸ்வதி மீது ஆபாசமாக பேசுவது மற்றும் கொலை மிரட்டல் ஆகிய இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து சரஸ்வதியை கைது செய்த செல்வபுரம் காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்