கண்ணீர் வடிக்கும் ஆசிரியர்கள்: 15 ஆண்டு போராட்டம், திமுக வாக்குறுதி என்னாச்சு? பணி நிரந்தரம் எப்போது?
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் கடந்த 15 ஆண்டுகளாகப் பகுதிநேர ஆசிரியர்களாகப் பணியாற்றும் 12,000 ஆசிரியர்கள், தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்பட்ட பணி நிரந்தரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் கடந்த 15 ஆண்டுகளாகப் பகுதிநேர ஆசிரியர்களாகப் பணியாற்றி வரும் சுமார் 12,000 ஆசிரியர்கள், தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்பட்ட பணி நிரந்தரம் என்ற ஒற்றை இலக்கை எதிர்பார்த்து கண்ணீருடன் காத்திருப்பதாகத் தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வேதனையுடன் தெரிவித்துள்ளது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்து நூறுநாட்களில் பணி நிரந்தரம் என கூறிய நிலையில், ஆயிரம் நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையிலும் பணி நிரந்தரம் செய்யப்படாதது குறித்து, கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
15 ஆண்டு கால தற்காலிகப் பணி
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 2011-2012 ஆம் கல்வியாண்டில் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்க்கைக்கல்வி போன்ற பாடங்களுக்காக சுமார் 16 ஆயிரம் பேர் பகுதிநேர ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டனர். அப்போது இவர்களுக்கு மாதம் தொகுப்பூதியமாக ரூ. 5 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டது.
கடந்த 15 ஆண்டுகளில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட சம்பள உயர்வு விவரங்களை செந்தில்குமார் தனது அறிக்கையில் பட்டியலிட்டுள்ளார்:
- முதல் உயர்வு: 2014ஆம் ஆண்டில் ரூ. 2 ஆயிரம் வழங்கப்பட்டது.
- இரண்டாம் உயர்வு: 2017ஆம் ஆண்டில் ரூ. 700 வழங்கப்பட்டது.
- கடைசி உயர்வு: 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி ரூ. 2,300 வழங்கப்பட்டது.
இந்த உயர்வுக்குப் பிறகு, ஆசிரியர்களின் சம்பளம் ரூ. 10 ஆயிரமாக ஆனது.
நம்பிக்கை அளித்த தேர்தல் வாக்குறுதி
2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 -ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து, ஏப்ரல் 6 -ஆம் தேதி வாக்கெடுப்பும், மே 2 -ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில், தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் 181வது வாக்குறுதியாக, பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அப்போது தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். மேலும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் பகுதிநேர ஆசிரியர் ஸ்டாலின் என்பவரிடம் இந்த ஸ்டாலின் ஆட்சியர் வந்த நூறு நாட்களில் அந்த ஆசிரியர் ஸ்டாலினின் கோரிக்கை நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.
"பத்து ஆண்டுகளாக ஆட்சிக்கு வர முடியாமல் தவித்த தி.மு.க.வின் பணி நிரந்தரம் வாக்குறுதியை நம்பி, பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் தி.மு.க.விற்கே வாக்களித்தனர்," என செந்தில்குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பணி நிரந்தரம் எங்கே?
தி.மு.க. வெற்றி பெற்று, மே 7ஆம் தேதி மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை பதவியேற்றது. இதனால், முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி நூறு நாளில் பணி நிரந்தரம் செய்வார் எனப் பகுதிநேர ஆசிரியர்கள் நம்பினர்.
"முதல்வராக மு.க. ஸ்டாலின் வருவதற்கு ஒரு உறுதுணையாக இருந்த, கைகொடுத்த பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்து கைதூக்கி விடுவதுதான் அவருக்கு நன்றிக்கடனாக இருக்கும். ஆனால், பணி நிரந்தரம் செய்யப்படவில்லை," என்று கூட்டமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.
ஆயிரம் நாட்களுக்குப் பிறகு உதவித்தொகை
பலகட்டப் போராட்டங்களைத் தொடர்ந்த பிறகு, தி.மு.க. ஆட்சிக்கு வந்து சுமார் ஆயிரம் நாட்களை (மூன்று ஆண்டுகளை) நெருங்கும்போது, பகுதிநேர ஆசிரியர்களுக்கு உதவித்தொகை என்ற பெயரில் ரூ. 2,500 வழங்கப்பட்டது.
தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக வழங்கப்பட்ட ரூ. 10 ஆயிரம் சம்பளத்துடன், இந்த ரூ. 2,500 தொகையைச் சேர்த்து மொத்தமாக ரூ. 12,500 வழங்காமல், இரண்டு சம்பளமாக வழங்குவது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு தற்போது 23 மாதங்கள் அதாவது இரண்டு ஆண்டுகள் முடிய உள்ள நிலையிலும் முதல்வர் பணி நிரந்தரம் செய்யாமல் இருப்பது பெருமை சேர்க்காது என செந்தில்குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.
உடனடி நடவடிக்கை தேவை
"இன்னும் 5 மாதங்களில் அடுத்த சட்டசபை தேர்தல் நடத்தி, அதில் வெற்றி பெறுகின்ற கட்சி ஆட்சி அமைத்தாக வேண்டும். எனவே, டிசம்பர், ஜனவரி மாதங்களில் முதல்வர் கையில் ஆட்சி அதிகாரம் இருக்கின்றபோதே பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்," என கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
பணி நிரந்தரம் செய்யப் பெரிய அளவில் நிதிச் செலவு ஏற்படாது என்றும், மாதமொன்றுக்கு கூடுதலாக சுமார் ரூ. 20 கோடி மட்டுமே செலவாகும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 12 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காக முதல்வர் இதைச் செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் அரசு வேலை, எதிர்காலம் கிடைக்கும் என நம்பி இந்த வேலையில் சேர்ந்த 16 ஆயிரம் பேரில், இதுவரை சுமார் 4 ஆயிரம் பேர் மரணம், பணி ஓய்வு, அல்லது ராஜினாமா போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
"15 ஆண்டுகளாகத் தற்காலிக வேலையில், தற்போது வழங்கப்படும் ரூ. 12,500 என்ற குறைந்த சம்பளத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்ற சுமார் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்தால் மட்டுமே, இனி எஞ்சி இருக்கும் சில ஆண்டுகளை நல்லபடியாக வாழ முடியும்," என்று செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், மே மாதம் சம்பளம் இல்லாமல், அரசு சலுகைகள் இல்லாமல் தொகுப்பூதியத்தில் தவிக்கின்ற பகுதிநேர ஆசிரியர்களை, தொகுப்பூதியத்தில் இருந்து காலமுறை சம்பளத்திற்கு மாற்றி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் அவர் அறிக்கையின் வாயிலாக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.






















