கோவையில் அரசு ஊழியர் காலில் விழுந்த விவகாரம்- தலித் என்ற பெயரை பயன்படுத்தி நாடகமாடியது அம்பலம்
ஜாதி ரீதியாக கிராம உதவியாளர் முத்துச்சாமியை மிரட்டி காலில் விழ வைத்ததாக தகவல்கள் வெளியானது. விவசாயி கோபால்சாமி தன்னை கிராம உதவியாளர் முத்துச்சாமி தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
கோவை மாவட்டம் அன்னூர் ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம உதவியாளர் முத்துச்சாமி என்பவர் கோபால்சாமி என்ற விவசாயி காலில் விழுந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த 7ஆம் தேதி சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவில் ஓட்டர்பாளையம் வி.ஏ.ஒ அலுவலகத்தில் கிராம உதவியாளர் முத்துச்சாமி, விவசாயி கோபால் சாமியின் காலில் விழும் காட்சிகள் வெளியானது. ஜாதி ரீதியாக கிராம உதவியாளர் முத்துச்சாமியை மிரட்டி காலில் விழ வைத்ததாக தகவல்கள் வெளியானது. விவசாயி கோபால்சாமி தன்னை கிராம உதவியாளர் முத்துச்சாமி தாக்கியதாக அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்திரவிட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தனியாகவும், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தனியாகவும் விசாரணை மேற்கொண்டனர். விவசாயி கோபால்சாமி யையும், கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி மற்றும் கிராம உதவியாளர் முத்துச்சாமியையும் தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் விவசாயி கோபால்சாமி தன்னை கிராம உதவியாளர் முத்துச்சாமி தாக்கியதாக கூறினாலும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும், அதேவேளையில் கிராம உதவியாளர் முத்துச்சாமி கோபால்சாமியின் காலில் விழுந்ததற்கான ஆதாரம் இருப்பதாகவும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வி.ஏ.ஒ கலைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஒரு வழக்கும், கிராம உதவியாளர் முத்துச்சாமி கொடுத்த புகாரின் பேரில் வன்கொடுமை வழக்கு மற்றும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் என்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக விவசாயி கோபால்சாமியை, கிராம உதவியாளர் முத்துச்சாமி வி.ஏ.ஒ அலுவலகத்தில் வைத்து தாக்கி கீழே தள்ளிவிடும் காட்சிகள் வெளியானது. இந்நிலையில் இந்த வீடியோ காட்சிகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் விவசாயி கோபால்சாமி மீது போடப்பட்ட வன்கொடுமை வழக்கு உட்பட அனைத்து வரக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் எனவும், கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி மற்றும் கிராம உதவியாளர் முத்துச்சாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் காவல்துறையிடம் மனு அளித்தனர்.
இந்நிலையில் புதிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி மற்றும் அவரது உதவியாளர் முத்துச்சாமி ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், விசாரணையின் மீது தவறான தகவல்களை அளித்து ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்கு துறை ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து இது குறித்து அன்னூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வி.ஏ.ஒ அலுவலகத்தில் நடந்த சம்பவங்களை செல்போனில் வீடியோ எடுத்து, தவறான தகவல்களுடன் சமூக பதட்டத்தை ஏற்படுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் பரப்பிய நபர் குறித்தும் அன்னூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.