Crime : பகீர்... 2.5 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள்.. 211 கிலோ குட்கா பறிமுதல்.. கோவையில் இருவர் கைது
இந்தாண்டில் மட்டும் சுமார் 1580.120 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் சுமார் 423.926 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் இன்று பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனைக்கு வைத்திருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் ஒன்னிபாளையம் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரந்தாபன் தாஸ் (33) என்பவரை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவர் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர் 2.550 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் 300 கிராம் எடையுள்ள கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் பிரந்தாபன் தாஸை நீதிமன்ற காவலில் காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
இதேபோல பொள்ளாச்சி பகுதியில் போதைப் பொருள்கள் விற்பனை செய்பவர்கள் மற்றும் பதுக்கி வைத்திருப்பவர்கள் விபரங்கள் சேகரிக்கப்பட்டு காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த தனராம் மகன் ஜியாண்ட்ரா குமார்(31) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 1 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 211.800 கிலோ புகையிலை பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த நபரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் வகையில் காவல் துறையினர் மேற்கொண்ட சோதனைகளில் இந்தாண்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 147 நபர்கள் மீது 137 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து சுமார் 1580.120 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 190 நபர்கள் மீது 143 வழக்குகள் பதிவு செய்து, அவர்களிடமிருந்து சுமார் 423.926 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் எச்சரித்துள்ளார். போதைப்பொருட்கள் விற்பனை தொடர்பாக பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்-அப் எண் 77081-00100 ஆகிய எண்ணையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்