இ-மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டல்: கோவைக்கு அச்சுறுத்தல்? - போலீஸ் சொல்வது என்ன?
சென்னை காவல் துறை தலைமை அலுவலகத்திற்கு இமெயில் மூலம், கோவையில் பல இடங்களில் வெடி குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கோவையில் பல இடங்களில் குண்டு வெடிக்கும் என சென்னை காவல் துறை தலைமை அலுவலகத்திற்கு இமெயில் சென்றுள்ள நிலையில், கோவை நகரில் காவல் துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை காவல் துறை தலைமை அலுவலகத்திற்கு ஒரு இமெயில் சென்றுள்ளது. அந்த மெயிலில் கோவையில் பல இடங்களில் வெடி குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அந்த இ மெயிலில் பாஜக அலுவலகம், மோடி ஒழிக என்ற வாசகங்களும் இடம் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து கோவை மாநகர காவல் துறையினர் நேற்று இரவு முதல் கோவை முழுவதும் பாதுகாப்பு பணியை பலப்படுத்தினர். கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகம் உட்பட நகரின் முக்கிய இடங்களில் காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை பா.ஜ.க அலுவலகத்தில் இரவு காவல் துறையினர் சோதனை கொண்டதுடன், பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே அந்த இமெயில் குறித்து போலீசார் விசாரித்த போது, மெயில் ஐடி சாத்தூரை சேர்ந்த இசக்கி என்பவரின் பெயரில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ”கோவையில் வெடிகுண்டு வெடிக்கும் என மின்னஞ்சல் அனுப்பப்பட்டது வதந்தி. போலியாக மெயில் அனுப்பப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் காவல் துறை பாதுகாப்பு அதிகப்படுத்தவில்லை. தீபாவளிக்கு வழக்கமாக வழங்கக்கூடிய பாதுகாப்பை மட்டுமே அதிகரித்துள்ளோம்” எனத் தெரிவித்தார். கோவைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.