கோவை மாணவிக்கு வேறு துன்புறுத்தல் நடந்ததா என்னும் விசாரணை தீவிரம்.. துணை காவல் ஆணையாளர் பேட்டி
"மாணவிக்கு வேறு யாரேனும் பாலியல் தொந்தரவு அளித்தனரா என்பது குறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது"
![கோவை மாணவிக்கு வேறு துன்புறுத்தல் நடந்ததா என்னும் விசாரணை தீவிரம்.. துணை காவல் ஆணையாளர் பேட்டி police said Inquiry sexually harassed by anyone else Coimbatore Suicide girl in chinmaya vidyalaya கோவை மாணவிக்கு வேறு துன்புறுத்தல் நடந்ததா என்னும் விசாரணை தீவிரம்.. துணை காவல் ஆணையாளர் பேட்டி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/14/e8671b45105cde818aeb1da6b623682f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 11 ம் வகுப்பு வரை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அப்பள்ளியில் படிக்க விரும்பவில்லை எனக்கூறி, மாற்றுச் சான்றிதழ் பகுதியை வேறொரு பள்ளிக்கு மாறினார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள் பக்கமாக தாழிட்டுக் கொண்டு மின் விசிறியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து மாணவியின் பெற்றோர்கள் புகார் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் செய்து வருகின்றனர். மாணவியின் உடல் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.. இதனிடையே ‘யாரையும் சும்மா விடக்கூடாது’ என 3 பேர்களை குறிப்பிட்டு மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவி தற்கொலைக்கு பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் அளித்த பாலியல் தொல்லையே காரணம் என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பள்ளி ஆடிட்டோரியத்திற்கு வரவழைத்த மிதுன் சக்கரவர்த்தி மேலாடையை கழற்றி பாலியல் தொல்லை அளித்ததாகவும், இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
மேலும் மாணவிக்கு உளவியல் ஆலோசனையும் பள்ளி நிர்வாகம் வழங்கியதாகவும், தொடர்ந்து மன உளைச்சலுக்கு உள்ளான மாணவி தற்கொலை செய்து கொண்டார் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அப்பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு, தலைமறைவாக இருந்த மீரா ஜாக்சனை தேடி வந்தனர்.
இதனிடையே பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அங்கு சென்ற தனிப்படை காவல் துறையினர் மீரா ஜாக்சனை கைது செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட மீரா ஜாக்சனை கோவை அழைத்து வந்து, ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர். 6 மணிநேர விசாரணைக்கு பின்னர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டதை அடுத்து மாணவியின் உறவினர்கள் நடத்திய போராட்டம் கைவிடப்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் இருந்து உடலை பெற்ற உறவினர்கள் தகனம் செய்தனர். இதனிடையே கோவை வடக்கு சரக துணை ஆணையாளர் ஜெயசந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், ”மாணவி தற்கொலை வழக்கில் பாலியல் துன்புறுத்தல் இருந்ததா என்பது குறித்து விசாரணை நடந்தது. அந்த விசாரணையில் பள்ளி ஆசிரியர் குற்றவாளியாக கருதப்பட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாலியல் புகார் தொடர்பாக தெரிந்து இருந்தும், நடவடிக்கை எடுக்காமல் காவல் துறைக்கு தெரியப்படுத்தாத பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மாணவிக்கு வேறு யாரேனும் பாலியல் தொந்தரவு அளித்தனரா என்பது குறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒரு துண்டு சீட்டு, சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மாணவியின் தற்கொலைக்கு வேறு எதாவது காரணம் இருக்கிறதா என்பது குறித்து தொடர் விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணை அடிப்படையில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)