பாசி நிறுவன உரிமையாளரை கடத்தி பணம் பறித்த வழக்கு; ஐஜி பிரமோத்குமார் மீது குற்றச்சாட்டு பதிவு
இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகியும், 5 பேர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்ட வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு ‘பாசி போரக்ஸ் டிரேடிங்’ என்ற நிதி நிறுவனம் கடந்த 2009 ம் ஆண்டில் செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனம் முதலீட்டுக்கு அதிக வட்டி அளிப்பதாகக் கூறி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களிடம் பணம் வசூல் செய்யப்பட்டது. ஆனால், முதலீடு செய்தவர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி பணம் திரும்ப வழங்கப்படவில்லை. இதையடுத்து, முதலீட்டாளர்கள் அளித்த புகார் அடிப்படையில், திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில், இந்த வழக்கை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால் சிபிஐ விசாரிக்க வேண்டும் என முதலீட்டாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ நடத்திய விசாரணையில் பாசி நிறுவனம் 58,571 பேரிடம் 930.71 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இந்த வழக்கை விசாரித்த கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2022 ம் ஆண்டில் குற்றம்சாட்டப்பட்ட மோகன்ராஜ் மற்றும் கமலவள்ளிக்கு மொத்தம் 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.171.74 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த மோசடி வழக்கில் இருந்து பாசி நிதி நிறுவன இயக்குநர்களை கடத்தி ரூ.2.50 கோடியை லஞ்சமாக பெற்றதாக, அப்போதைய மேற்கு மண்டல காவல் துறை தலைவர் ஐ.ஜி. பிரமோத்குமார், அப்போதைய சிபிசிஐடி டிஎஸ்பி ராஜேந்திரன், காவல் ஆய்வாளர் மோகன்ராஜ், திருநெல்வேலியைச் சேர்ந்த ஜான் பிரபாகரன், திருப்பூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்கிற தரணி செந்தில்குமார் ஆகியோர் மீது சிபிஐ தனியே வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த 2013-ம் ஆண்டே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்படாமல் இருந்து வந்தது. இந்த வழக்கில் இன்று ஐஜி பிரமோத்குமார் உள்ளிட்ட 5 பேர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் எனவும், அன்று பிரமோத் உட்பட 5 பேரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதன்படி இன்று ஐ.ஜி. பிரமோத்குமார் உட்பட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது ஐஜி பிரமோத்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தரப்பு வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருப்பதாகவும், இன்று அது விசாரணைக்கு வருவதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கை மாலை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று மாலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஐஜி பிரமோத்குமார், டிஎஸ்பி ராஜேந்திரன், ஆய்வாளர் மோகன்ராஜ், இடைத்தரகர்கள் ஜான் பிரபாகரன், செந்தில்குமார் ஆகிய ஐந்து பேர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து சாட்சி விசாரணைக்கான பட்டியலை வருகிற டிசம்பர் 8 ம் தேதி தாக்கல் செய்ய சிபிஐ அதிகாரிகளுக்கு நீதிபதி கோவிந்தராஜன் உத்தரவிட்டார். இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகியும், 5 பேர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்ட வழக்கில் தற்போது குற்றசாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.