Mudumalai Tiger Reserve: முதுமலையில் அதிர்ச்சி... 2 புலிக்குட்டிகள் உயிரிழப்பு ; வனத்துறையினர் விசாரணை
புலிகள் காப்பக வனப்பகுதியில் உயிரிழந்த நிலையில் இரண்டு புலி குட்டிகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் இரண்டு புலி குட்டிகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம், மலை மாவட்டமாக இருந்து வருகிறது. பல்லுயிர் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாவட்டத்தின் வனப்பகுதிகள், காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகளின் புகலிடமாக உள்ளது. குறிப்பாக கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் அதிகளவிலான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கர்நாடகா மற்றும் கேரளா மாநில எல்லைகளில் அமைந்துள்ள இந்த பகுதிக்கு, மற்ற மாநிலங்களில் இருந்து காட்டு யானை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் வருவதும், இப்பகுதிகளில் இருந்து அம்மாநிலங்களுக்கு அவை செல்வதும் உண்டு. உணவு மற்றும் தண்ணீர் தேடி வரும் காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகளை முதுமலை வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் சாலையோரங்களில் பார்க்க முடியும்.
முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வெளிமண்டல வனப்பகுதியில் அமைந்துள்ளது சீகூர் வனப்பகுதி. இந்த வனப்பகுதியில் யானை, புலி, மான், சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள், பல்வேறு வகையான பறவைகள் மற்றும் அரிய வகை மரங்கள் உள்ளன. இந்த பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளது. இதனால் இந்த வனப்பகுதியில் நாள்தோறும் வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொள்வது வழக்கம். இதன் ஒரு பகுதியாக சிறியூர் வடக்கு வனப்பகுதியில் இன்று வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, வனப்பகுதியில் பிறந்து 15 நாட்களே ஆன இரு புலி குட்டிகள் உயிரிழந்த நிலையில் கிடப்பதை கண்டறிந்தனர்.
இதனை அடுத்து உயிரிழந்த புலிக்குட்டிகளின் உடலை மீட்ட வனத்துறையினர் புலிக்குட்டிகள் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கால்நடை மருத்துவர்கள் இறந்த புலிக் குட்டிகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தனர். மேலும் எதனால் உயிரிழந்து உள்ளது என்பதை கண்டறிய உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்டு முக்கிய பாகங்களை சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். உடற்கூராய்வு அறிக்கை கிடைத்த பின்னரே, புலிக்குட்டிகள் எதனால் உயிரிழந்தது என்பதற்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இரண்டு புலி குட்டிகளில் ஒன்று உடல் முழுவதும் அழுகிய நிலையில் இருப்பதால் அது ஆணா பெண்ணா என கண்டறிய முடியவில்லை எனவும், மற்றொரு குட்டி ஆண் புலிக்குட்டி எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர். தாய் புலி உயிருடன் உள்ளதா அல்லது இறந்துவிட்டதா என்பதும் குறித்தும் சீகூர் வனத்துறையினர் தேடி வருகின்றனர். முதுமலை புலிகள் கப்பக வன பகுதியில் பிறந்து 15 நாட்களே ஆன 2 புலி குட்டிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.