நீலகிரி மலை இரயில் சேவை 11ம் தேதி வரை ரத்து! ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்!
கனமழை எச்சரிக்கை காரணமாக உதகை - மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை இன்று முதல் 11 ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்கு உரிய இடமாக நீலகிரி மாவட்டம் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நீலகிரிக்கு மலை இரயில் பயணம் செய்வது என்பது, ஒரு உன்னத பயண அனுபவமாக இருந்து வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகை வரை நீலகிரி மலை இரயில் இயக்கப்படுகிறது. இந்த நீலகிரி மலை இரயில் தென்னிந்தியாவில் உள்ள ஒரே மலை இரயிலாக அமைந்துள்ளது.
மலை ரயில்:
மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரையிலான மலை இரயில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1899 ம் ஆண்டு துவக்கப்பட்டது. கடந்த 2005 ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் இந்த மலை இரயில், உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நீராவி மூலமும், குன்னூர் முதல் உதகை வரை டீசலிலும் ரயில் இயக்கப்படுகிறது. இந்த மலை ரயில் உள்நாட்டு பயணிகளை மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளை கவர்ந்திழுந்து வருகிறது.
108 வளைவுகள், 16 சுரங்கங்கள், 250 பாலங்கள் ஆகியவற்றை கடந்து செல்லும் மலை இரயிலில் இருந்து, மலைகள், அடர்ந்த காடுகள், ஆங்காங்கே நீர் வீழ்ச்சி இயற்கையின் ஏழில் கொஞ்சும் கண் கொள்ள காட்சிகளை காண முடியும். இதனால் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
11ம் தேதி வரை ரத்து:
மழைக்காலங்களில் கனமழை காரணமாக மண் சரிவு அபாயம் இருப்பதால் நீலகிரி மலை இரயில் சேவை இரத்து செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக உதகை - மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை இன்று முதல் 11 ம் தேதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் சேவை 11 ம் தேதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்தியரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சாரல் மழை:
இதன்படி கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது. மேலும் இரவு நேரங்களில் கடும் குளிா் நிலவி வந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மேலும் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாநகர் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. அதேசமயம் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.