கோவை : ”உப்பு போட்டு சாப்பிடுபவராக இருந்தால்..” : அண்ணாமலை மீது அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டம்..
"நல்ல மனிதராக சாப்பாட்டுக்கு உப்பு போட்டு சாப்புடுற ஆளாக இருந்தால், அண்ணாமலை ஆதாரத்தை வெளியிட வேண்டும். ஆதாரம் இல்லாமல் இருப்பை காட்ட பேசுகின்றார்" என்றார்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்குதல், கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்குதல் மற்றும் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பயனாளிகளுக்கு காசோலை, மற்றும் மின் இணைப்பு ஆணையை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியபோது, “கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 8905 மின்மாற்றிகள் மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவை மாவட்டத்தில் 203 கோடி ரூபாய் வரையில் மின்வாரியம் சார்பில் பணிகள் நடைபெற்று வருகின்றது. ஒரே ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு இலவச மின் இணைப்பு கொடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மின்வாரியத்தில் புதிய நடைமுறைகள் இல்லை. ஏற்கனவே இருக்கும் நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றது. மின்வாரிய கடன்சுமை 1.59 லட்சம் கோடி உள்ளது. வருடத்திற்கு 13ஆயிரம் கோடி வட்டி மட்டுமே செலுத்தும் நிலை இருக்கின்றது. இதற்கான காரணம் கடந்த ஆட்சியில் 50 விழுக்காடு மின்சாரம் கொள்முதல் செய்ய செலவிடப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் சொந்த நிறுவு திறன் 53 மெகாவாட் மட்டும் அதிகபடுத்தப்பட்டு இருக்கின்றது. ஆய்வு பணிகள் தொடர்ந்து வருகின்றது.
மின் உற்பத்தியை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. தேவைக்கும் உற்பத்திக்குமான இடைவெளி 2500 மெகாவாட்டாக இருக்கின்றது. இடைவெளியை குறைக்க சூரிய மின்சக்தி, கேஸ் மின் உற்பத்தி ஆகியவற்றை அதிகப்படுத்தவும், ஏற்கனவே திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு செயல்படுத்தாமல் வைத்திருக்கும் திட்டங்கள் செயல் படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது” என அவர் தெரிவித்தார்.
4 சதவீத கமிஷன் குறித்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்து இருப்பது குறித்த கேள்விக்கு, “நேற்றே இதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டேன். பெரியாரின் வாசகத்துடன் முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றேன். நல்ல மனிதராக, சாப்பாட்டுக்கு உப்பு போட்டு சாப்பிடுகிற ஆளாக இருந்தால் அண்ணாமலை ஆதாரத்தை வெளியிட வேண்டும். ஆதாரம் இல்லாமல் இருப்பை காட்ட அவர் பேசுகின்றார். இருப்பை காட்டுவதற்காக சிலர் பேசுவதற்கெல்லாம் நேரத்தை வீணடிக்க வேண்டாம்” என பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “மின்வாரியத்தில் 1.46 லட்சம் பணியிடங்களில் 56 ஆயிரம் பணியிடம் காலியாக இருக்கின்றது. மின்வாரியத்திற்கு இருக்கும் கடனிற்கு 13 சதவீதம் வரை வட்டி கட்டி வருவதாக தெரிவித்தார். செலவீனங்களை குறைக்கும் வகையில் வெளிப்படை தன்மையுடன் இந்த அரசு செயல்பட்டு வருகின்றது. புதிய பணி நியமனங்கள் வரும் போது, தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும் என்றார். டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மது விற்றவர்கள் 134 பேர் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆட்சி பொறுப்பேற்று 5 மாத காலத்தில் கொரொனாவை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. தேர்தலின் போது முதல்வர் 505 வாக்குறுதிகள் கொடுத்தார். அதில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. துறை சார்ந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். கோவையில் சூயஸ் குடிநீர் திட்டம் குறித்து ஆய்வு கூட்டத்திற்கு பின்பு இந்த நிலையினை முதல்வர் கவனத்திற்கு எடுத்து சென்று உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தெரிவித்தார்.