Minister Mano Thangaraj: 'பால் உற்பத்தியை பெருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ - அமைச்சர் மனோ தங்கராஜ்
”தனியாரை விட ஆவின் தான் நம்பத்தகுந்த பால். நம்பிக்கையுடன், தைரியமாக மக்கள் வாங்கலாம். ஆவினில் 50 லட்சம் லிட்டர் பாலை கையாளும் திறன் உள்ளது. அதனை 70 லட்சம் ஆக உயர்த்துவதற்கு திட்டமிட்டு உள்ளோம்”
![Minister Mano Thangaraj: 'பால் உற்பத்தியை பெருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ - அமைச்சர் மனோ தங்கராஜ் Minister Mano Thangaraj said serious steps are being taken to increase milk production TNN Minister Mano Thangaraj: 'பால் உற்பத்தியை பெருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ - அமைச்சர் மனோ தங்கராஜ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/13/bfee17b13e736065aed8196096155fff1689238854767188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை பேரூர் பச்சாபாளையம் பகுதியில் உள்ள ஆவின் பாலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து சிறந்த பால் உற்பத்தியாளர்கள், சங்க செயலாளர்கள், கருவூட்டுனர்கள், விற்பனையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஆவின் ஒரு வலுவான பொதுத்துறை நிறுவனம். பால் விநியோகத்தின் மூலமாகவும், விவசாயிகளிடம் இருந்து பாலை நியாயமான விலைக்கு கொள்முதல் செய்வதின் மூலமாகவும் மிகப்பெரிய சேவை செய்து வருகிறது. இதனை வருங்காலங்களில் பால் உற்பத்தியை பெருக்குவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
தற்போதைய சூழலில் பால் மற்றும் பால் பொருட்களுக்கு மிகப்பெரிய தேவை உள்ளது. பால் உற்பத்தியை பெருக்குவதன் மூலம் தமிழகத்தின் ஜிடிபியை அதிகரிக்க முடியும். கிராமப்புற பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியும். வேலை வாய்ப்பு இல்லாத பல்வேறு இளைஞர்கள் பால் உற்பத்தியாளர்களாக மாறுவதை பார்க்க முடிகிறது. அதை நான் வரவேற்கிறேன். இன்னும் அதிகமானவர்கள் பால் உற்பத்தி செய்யும் பணிகள் மேற்கொள்ள வேண்டும். கோவை மாநகராட்சியில் பல்வேறு ஆவின் பூத்கள் அகற்றப்பட்டது குறித்து, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கலந்தாலோசித்து மக்கள் கூடுகின்ற பொது இடங்களில் ஆவின் பூத்துகள் வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதலுக்கு அனைத்து காலங்களிலும் ஒரே விலை தர மாட்டார்கள். அங்கு நிரந்தரமான விலை என்பது கிடையாது. ஆனால் ஆவினை பொருத்தவரை நிரந்தரமான விலை நிர்ணயம் செய்து, ஆண்டு முழுவதும் சீரான விலையே வழங்கி வருகிறோம். பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பும் உள்ளதால் கால்நடைகளுக்கான இடுபொருள்களில் சிரமங்கள் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதனால் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என கேட்டு வருகிறார்கள். இது முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும்.
பால் விநியோகஸ்தர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதிலும் காலதாமதம் ஏற்படுவதில்லை. இந்திய சந்தைகளில் ஆவின் பால் தான் விலை குறைவாகவும், தரமாகவும் விற்பனை செய்யப்படுகிறது. சில கடைகளில் ஆவின் பால் விலை உயர்ந்து விற்கப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், அது குறித்து கண்காணித்து வருகிறோம். ஆவின் மட்டுமல்லாமல் எந்த பொருள்களாக இருந்தாலும் எம்.ஆர்.பி. விலையில் தான் விற்பனை செய்ய வேண்டும். எம்.ஆர்.பி. விலையை விட அதிகமாக விற்பனை செய்யப்பட்டால், பொதுமக்கள் கண்டிப்பாக கேள்வி எழுப்ப வேண்டும். ஆவினை பொறுத்தவரை டீலர்கள் ஆக இருந்தாலும் எம்.ஆர்.பி. விலையைத் தாண்டி விற்பனை செய்யக்கூடாது. ஆவினைப் பொறுத்தவரை இடைத்தரகர்கள் எங்கும் கிடையாது.
ஆவின் நெய் கள்ள சந்தைகளுக்கு போவதற்கு வாய்ப்பில்லை. ஆவின் நெய்க்கும் இதர நெய்க்கும் 100 ரூபாய் வரை விலை வித்தியாசம் உள்ளது. ஆவினில் விலை குறைவு என்பதால், தேவைகள் அதிகமாக உள்ளது. அதனை சரி செய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். கோவை மாவட்டத்தில் பால் கொள்முதலை அதிகப்படுத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். பால் கொள்முதலை தனியாரிடம் தருவது விவசாயிகளுக்கு பாதுகாப்பானது அல்ல. விவசாயிகள் பாலை ஆவினுக்கு தருவது நல்லது.
தனியாரை விட ஆவின் தான் நம்பத்தகுந்த பால். நம்பிக்கையுடன், தைரியமாக மக்கள் வாங்கலாம். ஆவினில் 50 லட்சம் லிட்டர் பாலை கையாளும் திறன் உள்ளது. அதனை 70 லட்சம் ஆக உயர்த்துவதற்கு திட்டமிட்டு உள்ளோம்.
தனியார் பால் நிறுவனங்களில் கலப்படம் இருந்த நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இது குறித்து ஏதேனும் புகார்கள் இருந்தால் ஆவின் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர், உணவு பாதுகாப்பு துறையினர் ஆகியோரிடம் புகார் அளிக்கலாம். இந்த ஆண்டு இரண்டு லட்சம் கறவை மாடுகளுக்கு கடன் உதவி வழங்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதேபோல் பல்வேறு அமைப்புகள் மூலம் மானியங்கள் வழங்குகின்ற பணிகளும் நடைபெற்று வருகிறது. பால் உற்பத்தியை பெருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)