அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
கோயம்புத்தூரில் நாளை நடக்கும் மகாசிவராத்திரி நிகழ்வில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், துணை முதலமைச்சர் டிகே சிவகுமாரும் பங்கேற்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசியல் களம் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது அரசியல் கட்சிகள் அதற்கான ஏற்பாடுகளில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, நடிகர் விஜய் கடந்தாண்டு அரசியல் கட்சியைத் தொடங்கிய பிறகு தமிழக அரசியல் களத்தின் போக்கு உன்னிப்பாக அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகிறது.
ஒரே மேடையில் அமித்ஷா, துணை முதலமைச்சர்:
இந்த சூழலில், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அமித்ஷா நாளை கோவையில் நடக்கும் மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார். ஈஷா யோகா மையத்தில் நடக்கும் இந்த விழாவில் அவர் பங்கேற்கிறார். அவர் மட்டுமின்றி அவருடன் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டிகே சிவகுமாரும் பங்கேற்கிறார்.
நாட்டின் உள்துறை அமைச்சரும், ஒரு மாநிலத்தின் துணை முதலமைச்சரும் கோவையில் நடக்கும் நிகழ்ச்சியில் ஒரே மேடையில் பங்கேற்க இருக்கின்றனர். பாஜகவின் முக்கிய தலைவரும், கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் ஒரே மேடையில் பங்கேற்க இருப்பதால் பெரும் பரபரப்பும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர், கர்நாடக துணை முதலமைச்சர் மட்டுமின்றி அரசியல் பிரபலங்களும், அதிகாரிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்:
இதனால், ஒட்டுமொத்த கோயம்புத்தூரும் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. அமித்ஷா வருகையை முன்னிட்டு கடந்த சில நாட்களாகவே அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக இருந்தது. ஈஷா யோகா மையத்தில் போலீசார் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளனர்.
அமித்ஷா தமிழ்நாடு வந்துள்ள நிலையில் அவருடன் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்பட மற்ற சிலரும் சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும், கர்நாடக துணை முதலமைச்சரும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான டிகே சிவகுமாருடன் காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்:
எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் இருப்பதற்கு ஏற்ற வகையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல்துறை முன்னெடுத்துள்ளது. மேலும், அமித்ஷா வருகை ஒருபுறம், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மாமல்லபுரத்தில் தனது கட்சியின் 2வது ஆண்டு தொடக்க விழாவை நடத்துவது என தமிழ்நாடு அரசியல் களம் நாளை மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது.





















