’குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த வருண் சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்’ - லெப்.ஜெனரல் அருண் தகவல்
”உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது”
கடந்த 8 ம் தேதி முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவ பயிற்சி மையத்திற்கு சென்றனர். மோசமான வானிலை மற்றும் மேக மூட்டம் காரணமாக குன்னூர் அருகே நஞ்சப்பன் சத்திரம் என்ற இடத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் முப்படைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த வருண் சிங் என்ற அதிகாரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயிரிழந்த இராணுவ வீரர்களின் உடல்களுக்கு வெலிங்டன் ராணுவ பயிற்சி மைய வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் சூலூர் விமானப்படை விமான தளத்தில் இருந்து உயிரிழந்த 13 பேரின் உடல்களும், தனி விமானம் மூலம் டெல்லி பாலம் விமான நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, 13 பேரின் உடல்களும், இறுதி சடங்கிற்காக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்திற்காக காரணம் குறித்து விமானப்படை மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே ஹெலிகாப்டர் விபத்தின் போது மீட்புப் பணிகளில் ஈடுபட்ட நஞ்சப்பன் சத்திரம் பகுதி மக்களுக்கு காவல் துறையினர் மற்றும் இராணுவத்தினர் நன்றி தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் மீட்புப் பணிகளில் உதவிய மக்களுக்கு தென் பிராந்திய தலைமை அலுவலர் லெப்.ஜெனரல் ஏ.அருண் நஞ்சப்பன் சத்திரம் பகுதிக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார். இதன் பின் நஞ்சப்பன் சித்திரம் பகுதி மக்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, காய்கறிகள் மற்றும் கம்பளி போன்ற உதவிகளை லெப்.ஜெனரல் ஏ.அருண் வழங்கினார். பின்னர் மக்களிடம் ஏ.அருண் பேசுகையில், ”நஞ்சப்பன் சத்திரம் பகுதியில் உதவி மேற்கொண்ட கிராம மக்கள் அனைவருக்கும் ஒரு ஆண்டிற்கு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். மாதம் தோறும் நஞ்சப்பன் சத்திரம் பகுதியில் இலவசமாக ராணுவ மருத்துவர்களைக் கொண்டு ஒரு ஆண்டிற்கு மருத்துவ முகாம் நடத்தப்படும்” என தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஏ.அருண், ”குன்னூரில் 8ம் தேதியன்று எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டது. அந்த நெருக்கடியான சூழலில் தமிழ்நாடு அரசு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீலகிரி மாவட்ட நிர்வாகம், மருத்துவர்கள், தீயணைப்பு துறை, உள்ளூர் மக்கள் என உதவியர்களுக்கு நன்றி. ஹெலிகாப்டர் விபத்து செய்தியை ஊடகங்கள் சிறப்பாக கையாண்டன. ஹெலிகாப்டர் விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட வருண் சிங் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார். உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது” என அவர் தெரிவித்தார்.
மேலும் பார்க்க..