வால்பாறையில் செயல்படாத பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் - தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளர்கள் அவதி..!
திமுக அரசின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தை வால்பாறையில் செயல்படுத்தும் வகையில் சாதாரண அரசுப் பேருந்துகள் இயக்க வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும், முதலில் கையெழுத்திட்ட 5 திட்டங்களில் ஒன்று மகளிருக்கான இலவச பேருந்து பயணத்திட்டம். சாதாரண பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய வழி வகுக்கும் இத்திட்டத்தினால் ஆயிரக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். வேலைக்கு செல்லும் பெண்கள், ஏழை, எளிய பெண்களுக்கு பேரூதவியாக இத்திட்டம் அமைந்துள்ளது. ஆனால் இத்திட்டம் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் செயல்படாமல் உள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதி மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் இப்பகுதியில், தேயிலை தோட்டத் தொழில் முக்கிய வாழ்வாதரமாக உள்ளது. மலைப்பாதைகள் என்பதால் அரசுப் பேருந்துகள் மட்டுமே வால்பாறையில் இயங்கி வருகின்றன. ஆனால் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டத்தில் ஒரு பேருந்து கூட இயங்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். வால்பாறை பகுதியில் உள்ள 36 வழித்தடங்களிலும் மொஃபுசில் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அரசின் பெண்களுக்கான இலவசப் பேருந்து திட்டம் சாதாரண டவுன் பேருந்துகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், இத்திட்டம் இங்கு செயல்படாமல் இருக்கிறது என்கின்றனர்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வால்பாறை நகரச் செயலாளர் பரமசிவம் கூறுகையில், ”மலை வாழிடமான வால்பாறையில் 36 வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வனப்பகுதிகள் அதிகம் உள்ள இப்பகுதியில் பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்து பணி மற்றும் பிற இடங்களுக்கு செல்ல அரசு பேருந்து சேவை முக்கியமானதாக உள்ளது. ஆனால் இங்கு இயக்கப்படும் பேருந்துகள், எதுவும் சாதாரண பேருந்துகள் இல்லை. இதனால் பெண்களுக்கான இலவச பயணத் திட்டம் முற்றிலும் செயல்படாமல் உள்ளது.
மலைப்பாதையில் சாதாரண டவுன் பஸ்களை இயக்க முடியாது எனக் கூறி, பெண்களுக்கு இலவச பேருந்து திட்டத்தை அமல்படுத்தவில்லை. பேருந்து கட்டணம் என்பது தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளர்களுக்கு கூடுதல் சுமையாக இருந்து வருகிறது. மலை மாவட்டமான நீலகிரியில் பெண்களுக்கான இலவச பயணத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், வால்பாறையில் மட்டும் இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் இருக்கிறது.
அரசின் திட்டம் அனைத்துப் பகுதி மக்களுக்கும் பயனளிப்பதாக இருக்க வேண்டும். ஒரு பகுதியில் மட்டும் இத்திட்டம் செயல்படாமல் இருப்பது ஏற்புடையது அல்ல. வால்பாறையில் சாதாரண டவுன் பஸ்களை இயக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். சாதாரண டவுன் பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் முன்வந்தால் தேயிலை எஸ்டேட்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான பெண்கள் பயனடைவார்கள்” என அவர் தெரிவித்தார்.
திமுக அரசின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்திட்டத்தை வால்பாறையில் செயல்படுத்தும் வகையில் சாதாரண அரசுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என்பது வால்பாறை பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.