தொடர் மழையால் நிரம்பிய பில்லூர் அணை; பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!
100 அடி கொள்ளளவு கொண்ட அணை, 97 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 13 ஆயிரம் கன அடி நீர் வரத்து உள்ள நிலையில், 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. 100 அடி கொள்ளளவு கொண்ட அணை, 97 அடியை எட்டியுள்ளது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு வினாடிக்கு 13 ஆயிரம் கன அடி நீர் வரத்து உள்ள நிலையில், 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. எனவே பவானி ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பில்லூர் நீர் பிடிப்பு பகுதிகளான அப்பர் பவானி, அவலாஞ்சி, மஞ்சூர், குந்தா உள்ளிட்ட பகுதிகளில் கன மழை காரணமாக நேற்று காலை 81 அடியாக இருந்த பில்லூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் கிடுகிடு என உயர்ந்து, நேற்றிரவு 10 மணியளவில் 96 அடியை எட்டியது. வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்த காரணத்தினால் அனைத்து நீர்மட்டம் உயர்ந்து, நள்ளிரவு 12 மணி அளவில் முழு கொள்ளளவை எட்டியது. 100 அடி கொள்ளளவு கொண்ட அனைத்து 97 அடியை எட்டிய காரணத்தினால் அணையின் பாதுகாப்பு கருதி வரக்கூடிய தண்ணீர் முழுமையாக பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இன்றைய காலை நிலவரப்படி 13 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மின் உற்பத்தி மூலமாகவும் மேல் மதகு வழியாகவும், வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. கோவை குடிநீர் திட்டத்திற்காக ஆயிரம் கன அடி தண்ணீர் எடுக்கப்படுகிறது. தற்போது அணை நிறைந்துள்ள காரணத்தினால் அணையில் இருந்து திறக்கப்படும் முழுமையான தண்ணீர் பவானிசாகர் அணைக்கு சென்று சேரும். தற்போது மாயாற்றிலும், பவானி ஆற்றிலும் அதிகளவு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பவானிசாகர் அணை நீர் படிப்பு பகுதிகளில் உள்ள லிங்காபுரம், மொக்கை மேடு, சிறுமுகை, ஆலங்கொம்பு பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு காவல்துறை மற்றும் வருவாய் துறை மூலமாக கேட்டுக் கொண்டுள்ளனர்.
எக்காரணத்தைக் கொண்டும் பவானி ஆற்றில் இறங்க வேண்டாம் எனவும், குளிக்கவும், துணி துவைக்கவும் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர் அசம்பாவித சம்பவங்கள் ஏதாவது ஏற்பட்டால் உடனடியாக காவல்துறையினரையும் வருவாய் துறையினரையும் தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொண்டுள்ளனர் மழை பெய்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்