வால்பாறை: இரவானால் அச்சத்தில் மக்கள் - சாலைகளில் கூட்டமாக சுற்றித்திரியும் சிறுத்தைகள்!
வால்பாறை பகுதியில் சிறுத்தைகள் நடமாடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவம் போன்ற அவசரத்தேவைகளுக்குக் கூட இரவு நேரங்களில் வெளியே செல்ல முடியாதபடி வால்பாறை நகர்ப் பகுதிக்குள் சிறுத்தைகள் சுற்றித்திரிவதால் உடனடியாக வனத்துறையினர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை, ஆனைமலை புலிகள் காப்பமாக உள்ளது. இயற்கை எழில்கொஞ்சும் வனப்பகுதியில் சிறுத்தை, புலி, கரடி, யானை, காட்டெருமை உள்பட பல வனவிலங்குகள் வாழ்கின்றன. இங்கு சமீபகாலமாக சிறுத்தைப்புலிகள் வனத்தில் உணவுகள் எதுவும் கிடைக்காமல், வால்பாறை நகருக்குள் புகுந்து வருவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. இதோடு அங்குள்ள நாய், புனை, ஆடு, மாடு, கோழி போன்ற வீட்டு விலங்குகளை எல்லாம் தனக்கு இரையாக்கி வருகின்றன. முன்பெல்லாம் தனியாக வந்த சிறுத்தைகள் எல்லாம் தற்போது கூட்டாக ஊருக்குள் வரத்தொடங்கியுள்ளன. இரவு நேரங்களில் தெரு நாய்கள் நகர்ப்பகுதிக்குள் கூட்டமாக சுற்றித்திரிவதைப்போன்று வால்பாறை பகுதியில் சிறுத்தைகள் நடமாடியது தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சி மக்களிடம் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
Dubai DeepDive | 'அடேங்கப்பா 196 அடி ஆழமா.. நீ பாத்த' - பாக்காதவங்க, இந்த வீடியோவைப் பாருங்க..!
வால்பாறையில் பொதுவாக காமராஜர் நகர், எம்.ஜி.ஆர் நகர், வாழைத்தோட்டம், சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி சிறுத்தைகள் நடமாடுவதும், அங்குள்ள வீட்டு விலங்குகள் மற்றும் சில நேரங்களில் மக்களைத்தாக்கி செல்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளது. உணவில்லாமல் தனியாக வந்த சிறுத்தைகள் இப்பொழுது கூட்டமாக உலா வருகின்றன. வால்பாறை குமரன் நகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அருகில் 3 சிறுத்தைகள் ஜாலியாக உலா வந்த காட்சிகள், அருகில் டிபார்ட்மன்ட் ஸ்டோரில் உள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இதனைக்கண்ட மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பாக அதே பகுதியில் உள்ள டாக்டர் மஜூன்தார் இல்லத்தில், நாய்க்குட்டிகளை கடித்து விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
நகர்ப்பகுதிக்குள் இதுப்போன்று சிறுத்தைகள் நடமாடுவது தங்களுக்கு அச்சத்தினை ஏற்படுத்தும் விதமாகவும், இரவு நேரங்களில் மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளுக்குக்கூட வெளியில் எப்படி நாங்கள் செல்ல முடியும்? எனவும் மக்கள் புலம்புகின்றனர். எனவே உடனடியாக வனத்துறையினர் தலையிட்டு வால்பாறை நகர்ப்பகுதிக்குள் இருக்கும் சிறுத்தைகளைக் கூண்டு வைத்து பிடித்து அடந்த வனப்பகுதிக்குள் விட்டு விட வேண்டும் என்ற கோரிக்கைகளையும் மக்கள் முன்வைத்துள்ளனர். மேலும் இனிமேலும் காலம் தாழ்த்தாமல் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக வால்பாறை நகர்ப்பகுதிக்குள் கூட்டமாக சுற்றித்திரிந்த சிறுத்தைகளின் வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Zika Virus | ஸிகா வைரஸ் ஆபத்தானதா? எப்படி பரவும்? எப்படி தடுக்கலாம்?