‛இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே...’ கலெக்டர் பெயரிலும் பேஸ்புக் பண மோசடி!
‛15 ஆயிரம் ரூபாய் பணத்தை 9115082616 என்ற எண்ணில் சிவா ரெட்டி என்ற எனது நண்பருக்கு உடனே கூகுள் பே செய்யுங்கள், காலையில் பணத்தை திருப்பித் தருகிறேன்,’ என, கலெக்டர் பெயரில் மெஜேஞ்சர் வந்துள்ளது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் பெயரில் போலி முகநூல் கணக்கு உருவாக்கி பணம் பறிக்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முகநூலில் பிரபலமானவர்கள் பெயரில் போலிக் கணக்கு உருவாக்கி மோசடி செய்து வருவது அதிகரித்து வருகிறது. ஒரு நபரின் புகைப்படத்தை எடுத்து போலிக் கணக்கை துவக்கி, அவர்களது நண்பர்கள் பட்டியலில் உள்ளவர்களுக்கு நட்பு அழைப்பு விடுக்கப்படுகிறது. அதனை உண்மையான கணக்காக நினைத்து நட்பு அழைப்பை ஏற்றால், சிறிது நேரத்தில் அவசரத் தேவைகளுக்காக பணம் தேவைப்படுகிறது என மெசேஜ் அனுப்பப்படுகிறது. ஒரே நேரத்தில் பலருக்கும் இதேபோல மெசேஜ் அனுப்பப்படுகிறது. சிலர் நேரடியாக கேட்க தயக்கப்பட்டு இப்படி கேட்பதாக எண்ணி, பணத்தை அனுப்பும் சம்பங்களும் நடைபெறுகின்றன. அதேசமயம் அது போலி கணக்கு என்பதை கண்டறிந்து கேள்வி கேட்டால், அந்தக் கணக்கு முடக்கப்படுகிறது. இப்படி மோசடி செய்வது தொடர் கதையாகி வருகிறது. முகநூலில் பிரபலமாக இருப்பவர்கள், தொழிலதிபர்கள் செய்தியாளர்கள் உள்ளிட்டோர் பெயர்களில் இப்படி போலிக் கணக்குகள் துவங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் பெயரில் போலிக் கணக்கு துவக்கப்பட்டு, பணம் கேட்டு மோசடி செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியராக விஜயகார்த்திகேயன் பணியாற்றி வருகிறார். முகநூல், டிவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது மக்களுக்கு பயனுள்ள தகவல்களை பகிர்வதும், கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதும் வழக்கம். இந்த நிலையில் விஜயகார்த்திகேயன் படத்துடன் அவரது பெயரில் போலியாக முகநூல் கணக்கு துவக்கப்பட்டுள்ளது. அந்தக் கணக்கில் இருந்து பலருக்கும் நட்பு அழைப்பு சென்றுள்ளது. இதனை அறியாது பலரும் அந்த பட்பு அழைப்பை ஏற்றுள்ளனர். அழைப்பை ஏற்றவர்களுக்கு மெசேஜ் மூலம் உரையாடி 15 ஆயிரம் ரூபாய் பணத்தை 9115082616 என்ற எண்ணில் சிவா ரெட்டி என்ற எனது நண்பருக்கு உடனே கூகுள் பே செய்யுங்கள் எனவும், காலையில் பணத்தை திருப்பித் தருவதாகவும் கூறியுள்ளனர்.
அப்படி ஒரு மெசேஜ் திருப்பூரில் உள்ள ஒருவருக்கும் சென்றுள்ளது. ஒரு மாவட்ட ஆட்சியர் அவசரத் தேவைக்காக 15 ஆயிரம் ரூபாய் கடனாக தனது நண்பருக்கு அனுப்புமாறு சொல்வது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உஷாரான அவர் 'நான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளேன். தங்களது செய்தியை பணியில் உள்ள காவலர்களிடம் காட்டியுள்ளேன். காவலர்கள் என்னை உள்ளே அனுமதிக்க மறுக்கின்றனர் இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசிவிட்டு சொல்வதாக என்னை காக்க வைத்துள்ளனர். அவர்கள் அனுமதித்தால் நேரடியாக பணத்தை உங்களிடம் தருகிறேன்' எனக் கூறியுள்ளார். அதற்கு 'அவசரம் உடனே கூகுள் பேவில் பணம் அனுப்புங்கள்' என பதில் வந்துள்ளது. அதன் பிறகு மெசேஜ் வருவது நின்றுள்ளது.
இது தொடர்பாக திருப்பூரை சேர்ந்த சுந்தர பாண்டியன் என்பவர் முகநூல் ஸ்கீரின் சாட்டுடன் பதிவிட்டுள்ளார். அதில் 'எல்லை மீறும் பேஸ்புக் மோசடி கும்பல். பேஸ்புக்கில் பணம் பறிக்கும் கும்பல் பொதுமக்களிடம் தனது கைவரிசையை காட்டிவிட்டு இப்பொழுது நமது திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் Vijayakarthikeyan K அவர்கள் பெயரில் ஒரு போலிக்கணக்கு துவங்கி என் நண்பர்களுக்கு நட்பு அழைப்பு கொடுத்து பணம் கேட்க துவங்கியுள்ளனர். இதுபோன்ற நபர்களை களையெடுப்பது மிகவும் முக்கியம். உங்கள் பார்வைக்காக சில ஸ்கிரீன்ஷாட்ஸ். உடனடியாக நடவடிக்கை எடுங்கள்' என பதிவிட்டுள்ளார்.
இதனை தனது முகநூலில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயனும் பகிர்ந்துள்ளார். அதில் காவல் துறையினரிடம் போலி கணக்கு தொடர்பாக புகார் அளித்துள்ளதாகவும் , பேஸ்புக் நிறுவனத்திலும் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும் யாரும் ஏமாற வேண்டாம்' எனத் தெரிவித்துள்ளார்.