விலங்குகளை வேட்டையாட ’அவுட்டுக்காய்’ நாட்டு வெடிகுண்டு; கோவையில் அதிர்ச்சி!
பழங்களுக்குள் வெடியை மறைத்து வைத்து விடுவார்கள். அழுத்தம் கொடுக்கும் போது வெடித்து விடும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டிருக்கும்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனத் துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பூச்சியூர் அருகிலுள்ள கதிர் நாயக்கன்பாளையம் ரங்கசாமி என்பவரது பட்டா நிலத்தில் வெடிச் சத்தம் கேட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அங்கு தலை சிதறிய நிலையில் நாய் கிடந்துள்ளது. இதனையடுத்து அங்கு சோதனை மேற்கொண்டதில் ,அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடியை நாய் கடித்ததில் தலை சிதறி உயிரிழந்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சென்ற இரண்டு பேரை பிடித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் முருகேசன் என்பதும் காட்டு பன்றிகளை வேட்டையாட அவுட்டுக்காய் வைத்ததும் தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்த ஐந்து அவுட்டுக்காய்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த வனத்துறையினர், தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் இருவரையும் துடியலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து சுரேஷ் மற்றும் முருகேசன் மீது சட்ட விரோதமாக வெடி வைத்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடி பொதுவாக காட்டுப்பன்றிகளுக்காக வைக்கப்படுகிறது. பழங்களுக்குள் வெடியை மறைத்து வைத்து விடுவார்கள். அழுத்தம் கொடுக்கும் போது வெடித்துவிடும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டிருக்கும். பன்றிகள் பழம் என்று நினைத்து வாயில் வைத்துக் கடிக்கும்போது, தலை வெடித்துச் செத்துவிடும். அதனால் இது பன்றிக்காய் என அழைக்கப்படுவதும் உண்டு. இதனை எதிர்பாராத விதமாக யானைகள் உணவு என நினைத்து கடித்து, வாய் சிதைந்து உண்ணவும் முடியாமல், உறங்கவும் முடியாமல் உயிரிழந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதேபோல வளர்ப்பு விலங்குகளான மாடுகள், நாய்கள் போன்ற விலங்குகளும் அதனைக் கடித்து உயிரிழந்துள்ளன.
இதனிடையே கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘அவுட்டுக்காயைப் பயன்படுத்தி வனவிலங்குகளை வேட்டையாடியது தொடர்பாக கோவை மாவட்டத்தில் கடந்த 2020 ஆம் வருடம் மற்றும் நடப்பாண்டில் அன்னூர், பெரியநாயக்கன்பாளையம், காரமடை மற்றும் துடியலூர் காவல் நிலையங்களில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் தொடர்புடைய 9 நபர்களை கைது செய்தும், 14 அவுட்டுக் காய்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவுட்டு காய் தயாரிப்பதும் மற்றும் அதைப் பயன்படுத்தி வனவிலங்குகளை வேட்டையாடுவதும் சட்டப்படி குற்றம். இத்தகைய செயல்களில் ஈடுபடுபடுவோர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டு வெடி தயாரிப்பது குறித்த தகவல் தெரிந்தால் 9498181212 என்ற தொலைபேசி எண்ணிற்கும், 7708100100 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் இரகசியங்கள் காக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.