கோவையில் இன்று நடைபெறும் திமுக முப்பெரும் விழா: ஒரே மேடையில் 40 எம்.பி.க்கள் பங்கேற்பு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த பொதுக்கூட்ட நிகழ்வில் பங்கேற்க இருக்கின்றனர்.
கோவை கொடிசியா மைதானத்தில் இன்று திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இதில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா, நாற்பது தொகுதிகளிலும் வெற்றியை அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தல் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகிய விழாக்கள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் கலந்து கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பிற்பகல் கோவை விமான நிலையத்திற்கு வருகிறார். பின்னர் கொடிசியா மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க உள்ளார். கோவைக்கு வருகை தரும் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.
திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் இந்த பொதுக்கூட்ட நிகழ்வில் பங்கேற்கின்றனர். இது தவிர தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த பொதுக்கூட்ட நிகழ்வில் பங்கேற்க இருக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுகவின் மூத்த அமைச்சர்கள் முத்துசாமி, எ.வ.வேலு, ஆ.ராசா, சாமிநாதன் ஆகியோர் கோவையில் முகாமிட்டு பொதுக்கூட்ட மேடைக்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இன்று நடைபெறும் பொதுக்கூட்ட நிகழ்வுக்கு கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு மண்டலம் திமுக வசம்தான் இருக்கிறது என்பதை பொதுமக்களுக்கு காட்டும் விதமாகவும், 28 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை மக்களவைத் தொகுதி திமுக வசம் வந்திருக்கும் வெற்றியை பறைசாற்றும் விதமாகவும் இந்த பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு கோவை நகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்
முதலமைச்சர் நிகழ்ச்சியை முன்னிட்டு கோவை மாநகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்து மாநகர காவல் துறையினர் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளிலிருந்து பொதுக்கூட்டத்திற்கு வரக்கூடிய கட்சியினரின் வாகனங்கள் அவினாசி சாலை நீலாம்பூர், சின்னியம்பாளையம், தொட்டிப்பாளையம் பிரிவு, சித்ரா சந்திப்பு, இஷ்கான் ரோடு வழியாக சென்று கொடீசியா மைதானத்திற்கு செல்வதற்கு திருப்பி விடப்பட்டுள்ளது. திருச்சி, கரூர், தாராபுரம், பல்லடம் மற்றும் தென் மாவட்டங்கள் ஆகிய பகுதிகளிலிருந்து பொதுக்கூட்டத்திற்கு வரக்கூடிய கட்சியினரின் வாகனங்கள் திருச்சி சாலையிலிருந்து சூலூர் Y ரோடு சந்திப்பில் இருந்து சூலூர் குளம் முத்துக்கவுண்டன்புதூர் ரயில்வே பாலம் வழியாக அவினாசி சாலை சூலூர் பிரிவு அடைந்து நீலாம்பூர், சின்னியம்பாளையம், தொட்டிப்பாளையம் பிரிவு, சித்ரா சந்திப்பு மற்றும் இஷ்கான் ரோடு வழியாக சென்று கொடீசியா மைதானத்திற்கு செல்வதற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
பழனி, உடுமலை, வால்பாறை, ஆனைமலை, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளிலிருந்து பொதுக்கூட்டத்திற்கு வரக்கூடிய கட்சியினரின் வாகனங்கள் பொள்ளாச்சி சாலை L&T Bypass, வெள்ளலூர் பிரிவு, வெள்ளலூர், சிங்காநல்லூர், காமராஜர் சாலை, அவினாசி சாலையை அடைந்து, டைடல் பார்க், தண்ணீர் பந்தல் ஜங்சன் வழியாக கொடீசியா மைதானத்திற்கு செல்வதற்கு திருப்பி விடப்பட்டுள்ளது. வாளையார், க.க.சாவடி, நவக்கரை, எட்டிமடை ஆகிய இடங்களிலிருந்து பொதுக்கூட்டத்திற்கு வரக்கூடிய கட்சியினரின் வாகனங்கள் பாலக்காடு சாலையிலிருந்து குனியமுத்தூர், ஆத்துப்பாலம், உக்கடம், சுங்கம் பைபாஸ், சுங்கம், இராமநாதபுரம் சிக்னல், புலியகுளம், அவினாசி சாலை அடைந்து டைடல் பார்க், தண்ணீர் பந்தல் ஜங்சன் வழியாக கொடீசியா மைதானத்திற்கு செல்வதற்கு திருப்பி விடப்பட்டுள்ளது. நீலகிரி, மேட்டுப்பாளையம், காரமடை, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களிலிருந்து பொதுக்கூட்டத்திற்கு வரக்கூடிய கட்சியினரின் வாகனங்கள் அன்னூர், குரும்பபாளையம், காளப்பட்டி 4 ரோடு அடைந்து விளாங்குறிச்சி, தண்ணீர் பந்தல் அடைந்து கொடீசியா மைதானத்திற்கு செல்வதற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
துடியலூர், கணுவாய், தடாகம், ஆனைகட்டி ஆகிய இடங்களிலிருந்து பொதுக்கூட்டத்திற்கு வரக்கூடிய கட்சியினரின் வாகனங்கள் சரவணம்பட்டி, விளாங்குறிச்சி, சேரன் மாநகர் வழியாக தண்ணீர் பந்தல் அடைந்து கொடீசியா மைதானத்திற்கு செல்வதற்கு திருப்பி விடப்பட்டுள்ளது. அன்னூர், கோவில்பாளையம், குரும்பபாளையம் ஆகிய இடங்களிலிருந்து பொதுக்கூட்டத்திற்கு வரக்கூடிய கட்சியினரின் வாகனங்கள் கோவில்பாளையம், காபிக்கடை, விளாங்குறிச்சி 4 ரோடு ஜங்சன் வழியாக சேரன்மாநகர் அடைந்து கொடீசியா மைதானத்திற்கு செல்வதற்கு திருப்பி விடப்பட்டுள்ளது. எனவே, மேற்படி பகுதிகளுக்குச் செல்ல அல்லது மேற்படி சாலைகளின் வழியாக பயணங்களை மேற்கொள்ள இருக்கும் பொதுமக்கள், போக்குவரத்து நெருக்கடியை தவிர்த்து தாங்கள் செல்லவேண்டிய பகுதிகளுக்கு எளிதில் செல்வதற்கு ஏதுவாக முன்கூட்டியே தங்களது பயண திட்டங்களை வகுத்துக்கொள்ளுமாறும், மாற்று வழிகளை உபயோகித்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.