கோவையில் ஜூன் 15 ம் தேதி திமுகவின் முப்பெரும் விழா; மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முதல்வர் ஸ்டாலின்
நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பின்னர் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முதல் விழா கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
கோவை கொடிசியா மைதானத்தில் 15ந் தேதி திமுகவின் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இதில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா, நாற்பது தொகுதிகளிலும் வெற்றியை அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தல் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகிய விழாக்கள் நடைபெற உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு பணிகளை அமைச்சர் சு.முத்துச்சாமி துவக்கி வைத்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், திமுக தலைவரின் பெரும் முயற்சி காரணமாக இந்தியா முழுவதும் அருமையான கூட்டணி அமைக்கப்பட்டது. இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கவில்லை என்றாலும் மிகப் பெரிய வெற்றி பெற்று இருக்கிறது. பாஜக மத்தியில் தன்னிச்சையாக செயல்பட முடியாமல் உள்ளனர். இவ்வளவு பெரிய கூட்டணி அமைவதற்கு முதல்வர் தான் காரணம்.
வெற்றிக்கான காரணம்
தமிழ்நாட்டில் 40 இடங்களையும் பாண்டிச்சேரி சேர்த்து திமுக கூட்டணி வெற்றி பெறும் என முதல்வர் கூறினார். மக்களுடைய பணிகளை நாங்கள் செய்துள்ளோம். அந்த நம்பிக்கையில் இந்த வாக்குறுதிகளை கொடுக்கிறேன் என முதல்வர் தெரிவித்தார். சட்டதிட்டங்களுக்கு மாறாக வாக்குகளை பெறுவதற்கு எந்த முயற்சியும் எங்களுடைய கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் எடுக்கவில்லை. வட மாநிலங்களில் பல்வேறு பிரச்சினைகள் இருந்தது. நம்முடைய தமிழ்நாட்டில் வலுவாக இருந்தும் எந்தவிதமான சின்ன அசம்பாவிதம் கூட இல்லாமல் இந்த தேர்தலில் நடத்தி முடித்துள்ளோம். மக்கள் மிகப் பெருவாரியான வாக்குகள் கொடுத்துள்ளார்கள்.
மூன்று ஆண்டுகளில் முதல்வர் தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் நிலைத்து நின்றுள்ளது. இதுதான் முக்கியமான வெற்றிக்கு காரணம். திமுகவைச் சார்ந்த அடிமட்ட எந்த பதவியும் இல்லாமல் கழகத் தோழர்கள், சகோதரிகள் பொறுப்புகளில் உள்ள நண்பர்கள் அத்தனை பேரும் கடுமையாக உழைத்து, ஓய்வில்லாமல் உழைத்த உழைப்பு தான் இன்றைக்கு மாபெரும் வெற்றி நமக்கு கொடுத்துள்ளார்கள்.
தேதி மாற்றம்
மக்களிடம் திமுக திட்டங்களிடம் கொண்டு சென்றதன் காரணமாக மாபெரும் வெற்றியை நாம் மக்கள் நமக்கு கொடுத்துள்ளார். அதற்கு நன்றி சொல்ல வேண்டும் என்பது முதல்வரின் எண்ணமாக இருந்தது. ஒவ்வொரு இடமாக போய் இடமாக சென்று நன்றி சொல்ல வேண்டும். ஆனால் சட்டமன்றம் நடக்கின்ற காரணத்தினால் முதலில் ஒருங்கிணைத்து ஒரு கூட்டத்தை போட்டு மக்களுக்கு நன்றியை தெரிவிக்கலாம் என கூறியுள்ளார். இன்று மேற்கு மண்டலம் மொத்தமாக திமுக கையில் இருக்கிறது. மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்ற கடமையோடு சட்டமன்றத் தேர்தலில் மேற்கு மண்டலத்தில் சின்ன சரிவு ஏற்பட்டாலும் கூட முதல் கூட்டத்தை கோவையில் போட்டார்கள். அப்படிப்பட்ட தலைவர் கோவை மாவட்டத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டமாக இந்த முப்பெரும் விழா அமைந்துள்ளது. 14 ஆம் தேதி நடைபெற இருந்த விழா, மழையின் காரணமாக 15 ம் தேதிக்கும், கொடிசியா மைதானத்திற்கும் மாற்றப்பட்டுள்ளது” என தெரிவித்தார். இந்த முப்பெரும் விழா சட்டமன்ற தேர்தலுக்கு அடித்தளமா என என்ற கேள்விக்கு, ”2026 அடித்தளம் போட்டு வெகு நாட்கள் ஆனது இது தேர்தலை நோக்கி அல்ல, மக்களை நோக்கிய பயணம் என்றார். நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பின்னர் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முதல் விழா கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.