’கோடநாடு சம்பவத்தில் கனகராஜை ஈடுபடுத்தியது இபிஎஸ்தான்’ - தனபால் குற்றச்சாட்டு
எடப்பாடி பழனிச்சாமியை விசாரித்தால் எல்லாம் உண்மைகளும் தெரியவரும். சென்னையில் உள்ள எடப்பாடி வீட்டில் தான் சதிதிட்டம் போடப்பட்டது.
எடப்பாடி பழனிச்சாமி, இளங்கோவன், தங்கமணி ,வேலுமணி ஆகியோர் கனகராஜிடம் நேரடியாக மூளை சலவை செய்து கோடநாடு சம்பவத்தில் ஈடுபடுத்தினர் என சிபிசிஐடி விசாரணைக்கு வந்த கனகராஜின் சகோதரர் தனபால் தெரிவித்தார்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் கனகராஜின் சகோதரர் தனபால் இரண்டாம் கட்ட விசாரணைக்கு இன்று ஆஜரானார். சிபிசிஐடி விசாரணைக்கு செல்லும் முன்பு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “முதல் கட்ட விசாரணையில் 40 மேற்பட்ட கேள்விகள் கேட்டிருந்தார்கள். இன்று இரண்டாம் கட்ட விசாரணையில் மீதி கேள்வி கேட்க இருக்கன்றனர். கனகராஜ் எடுத்து வந்த பைகள் யாரிடம் கொடுத்தார்கள் என்பது குறித்தும் தெரிவித்துள்ளேன். இதேபோல பல கொலைகளை பழனிச்சாமி செய்திருக்கிறார். இதுகுறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். எடப்பாடி பழனிசாமி சொல்லி தான் கனகராஜ் இந்த சம்பவங்களை செய்தார். இதை என் தம்பி என்னிடம் சொல்லி இருக்கின்றார்.
இதற்கு முன்னர் விசாரணை நடத்திய அதிகாரியை விலைக்கு வாங்கி விட்டனர். இப்போது நேர்மையான அதிகாரிகள் உள்ளனர். விசாரணை செய்து வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி, இளங்கோவன், தங்கமணி ,வேலுமணி ஆகியோர் கனகராஜை நேரடியாக மூளை சலவை செய்து இந்த விவகாரத்தில் ஈடுபடுத்தினர். எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்தி முன்னே வந்தவர். நேரடியாக எதும் செய்யமாட்டார். சுதாகர் ஐஜி நடத்திய விசாரணையில் திருப்தி இல்லை. விசாரணையில் என்னை அடித்து துன்புறுத்தினார்கள். திமுக ஆட்சியில் மேல்மட்ட அதிகாரிகள் மட்டும்தான் மாறி உள்ளனர். கீழ் மட்ட அதிகாரிகள் இன்னும் எடப்பாடி பழனிசாமிக்குதான் பணி செய்து வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி போலிசார் எத்தனை நாள் விசாரணை நடத்தினாலும் பதில் சொல்ல நான் ரெடியாக இருக்கின்றேன்.
சென்னையில் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் ஐந்து நாட்கள் கனகராஜை மூளை சலவை செய்தார்கள். அனைத்து உதவியும் செய்வதாக கனகராஜிடம் சொல்லி இருக்கின்றனர். எடப்பாடி பழனிச்சாமியை விசாரித்தால் எல்லாம் உண்மைகளும் தெரியவரும். சென்னையில் உள்ள எடப்பாடி வீட்டில் தான் சதிதிட்டம் போடப்பட்டது. எடப்பாடியுடன் இளங்கோவன், வேலுமணி. தங்கமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர். எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும். அவரை விசாரிக்க சம்மன் அனுப்ப வேண்டும்” எனத் தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்கள் திருடப்பட்டது. இது தொடர்பாக சயான், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.