’எச்சரிக்கை... இந்துக்கள் வாழும் பகுதி’ ; கோவை அருகே சர்ச்சைக்குரிய அறிவிப்பு பலகையால் பரபரப்பு
காடுவெட்டிபாளையம் கிராமத்தில் ’எச்சரிக்கை இந்துக்கள் வாழும் பகுதி. இங்கு மதப்பிரச்சாரம் செய்யவும் மதக் கூட்டங்கள் நடத்தவும் அனுமதி இல்லை’ என வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே காடுவெட்டிபாளையம் கிராமத்தில் எச்சரிக்கை இந்துக்கள் வாழும் பகுதி எனவும், இங்கு மதப்பிரச்சாரம் செய்யவும் மதக் கூட்டங்கள் நடத்தவும் அனுமதி இல்லை எனவும் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் காடுவெட்டிபாளையம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அக்கிராமத்தின் நுழைவு வாயிலில் ஒரு சர்ச்சைக்குரிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. காவி நிறத்தில் உள்ள அந்த பலகையில் “எச்சரிக்கை. இங்கு இந்துக்கள் மட்டும் வாழும் பகுதி. இங்கு மத பிரச்சாரம் செய்யவும், மதக்கூட்டங்கள் நடத்தவும் அனுமதி இல்லை. மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இப்படிக்கு காடிவெட்டிபாளையம் ஊர் பொதுமக்கள்” என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.
‘யேசுவே இந்தியாவை ஆசிர்வதியும்’ தேசியக் கொடிக்கு கீழ் சர்ச்சை வாசகம் - பாஜகவினர் போலீசில் புகார்
இந்துக்கள் மட்டும் வாழும் பகுதி என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு பலகையின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் சர்ச்சைக்குரிய வகையில் வைக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பு பலகையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இப்பலகையை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து வழக்கறிஞர் ச.பாலமுருகன் கூறுகையில், “மக்களை பிரித்துக் காட்டும் வகையில் இது போன்ற அறிவிப்பு பலகைகள் வைக்கக்கூடாது. ஒரு பகுதியில் வாழும் மக்களை மத அடிப்படையிலோ, சாதி அடிப்படையிலோ அல்லது இன அடிப்படையிலோ பிரித்துக் காட்டுவது இந்திய தண்டனைச் சட்டம் 153 A பிரிவின் படி குற்றம். காவல் துறையினர் அறிவிப்பு பலகை வைத்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பலகை உடனடியாக அகற்றப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய அறிவிப்பு பலகை தொடர்பாக காடுவெட்டிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வத்திடம் கேட்ட போது, “அண்மையில் சிலர் காடுவெட்டிபாளையம் பகுதியில் மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் காவல் துறை அனுமதியின்றி ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரியாமல் இந்த பேனரை வைத்துள்ளனர்” என விளக்கம் அளித்தார். இந்த பலகை சர்ச்சையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இதனை அகற்ற காவல் துறையினரும், ஊராட்சி நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்