இந்து முன்னணி விநாயகர் சதுர்த்தி அழைப்பிதழில் திமுக மாவட்டப் பொறுப்பாளர் பெயர் ; சர்ச்சையும், விளக்கமும்..!
திமுகவையும், திராவிட மாடலையும் விமர்சிக்கும் இந்து முன்னணியின் விநாயகர் சதுர்த்தி அழைப்பிதழில் திமுக மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதியின் பெயர் இடம் பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது.
வருகின்ற ஆகஸ்ட் 31 ம்தேதி விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதையொட்டி இந்து அமைப்பினர் சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கோவை மாவட்டத்தில் பாஜக, இந்து முன்னணி, சிவசேனா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினர் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவையில் இந்து முன்னணி சார்பில் அச்சடிக்கப்பட்ட ஒரு அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் பரவியது. அதில் ஆகஸ்ட் 31ம் தேதி சுந்தராபுரம் பகுதியில் விநாயகர் பிரதிஷ்டை மற்றும் கணபதி ஹோமமும், 2ம் தேதி விசர்ஜன ஊர்வல பொதுக்கூட்டமும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 31ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திமுக கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத் தலைவரும், திமுக கவுன்சிலருமான தனலட்சுமி, திமுக கவுன்சிலர் குணசேகரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றாம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் அதிமுக சட்டமன்ற எதிர்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி கலந்து கொள்வார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read | Krishna Jayanthi 2022: கோகுலத்து கண்ணனை வரவேற்கும் கிருஷ்ண ஜெயந்தி! வரலாறு என்ன?
அந்த அழைப்பிதழில் பிரிவினைவாதத்தை முறியடித்து தேசிய சிந்தனையை வளர்ப்போம் என்ற பெயரில் திமுக அரசையும், திராவிட மாடலையும் விமர்சிக்கும் கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன. ”மாவட்டத்தின் கீழ் தான் ஒன்றியம் வரும் எனத் தெரிந்தும், இந்திய அரசை ஒன்றிய அரசு என்று இழிவுபடுத்திப் பேசுபவர்கள் பிரிவினைவாதிகள் என்பதை நாம் புரிந்து கொண்டோமா?, தாய் மொழி தமிழுக்கு முன்னுரிமை தரும் தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது விரிவினை மனப்பான்மை தானே?” ஆகிய கேள்விகள் இடம்பெற்றுள்ளன. மேலும் “சிவபெருமானையும், காளிதேவியையும் இழிவுபடுத்துபவர்களை ஆதரிப்பதும், அந்நிய மதங்களைப் பற்றி பேசினாலே கைது செய்யப்படுவதும் தான் சமத்துவா?, திருவள்ளுவர், ஒளவையார், பாரதியார் நெற்றியில் உள்ள திருநீற்றை அழித்து அவர்களது சிந்தனையை அசிங்கப்படுத்துவம், அசோகச் சக்கர சிங்கம் கர்ஜித்தால் அதீத அலப்பறை செய்வதும் தான் திராவிட மாடலா?” என்ற கேள்வியும் இடம் பெற்றுள்ளது.
திமுகவையும், திராவிட மாடலையும் விமர்சிக்கும் இந்து முன்னணியின் விநாயகர் சதுர்த்தி அழைப்பிதழில் திமுக மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதியின் பெயர் இடம் பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி இந்து முன்னணி நோட்டீஸில் தங்களது பெயர் இடம் பெற்றிருப்பது தனக்கு தெரியாது எனவும், இந்து முன்னணி அமைப்பினருடன் எந்த தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள மருதமலை சேனாதிபதி, “கோவை மாவட்ட இந்து முன்னணி சார்பில் விசர்ஜன ஊர்வல பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் அறிவிப்பு நோட்டீசில் எனது பெயரை எனது அனுமதி இல்லாமல் பதிவிட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். இனிமேல் எனது பெயரை எனது அனுமதி இல்லாமல் நோட்டீசுகளில் பதிவிட வேண்டாம் எனறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read | Krishna Jayanthi Pooja: கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டு முறை... எப்படி கொண்டாடுவது?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்