Coimbatore: ‘பார்ட் டைம்’ படிப்பினால் பட்டதாரிகளாகும் பஞ்சாலை பணியாளர்கள்; கோவை பஞ்சாலையின் ஒரு அசத்தல் முயற்சி..!
மாணவர்கள் படித்துக் கொண்டே வேலை செய்யும் பார்ட் டைம் வேலை குறித்து நமக்கு தெரியும். ஆனால் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டே படிக்கும் பார்ட் டைம் படிப்பு குறித்து தெரியுமா?
![Coimbatore: ‘பார்ட் டைம்’ படிப்பினால் பட்டதாரிகளாகும் பஞ்சாலை பணியாளர்கள்; கோவை பஞ்சாலையின் ஒரு அசத்தல் முயற்சி..! Coimbatore Spinning Mill employees becomes graduates by studying part time Check Details Coimbatore: ‘பார்ட் டைம்’ படிப்பினால் பட்டதாரிகளாகும் பஞ்சாலை பணியாளர்கள்; கோவை பஞ்சாலையின் ஒரு அசத்தல் முயற்சி..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/08/55f6af18c25f9c300f988e1108fe05f5_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மாணவர்கள் படித்துக் கொண்டே வேலை செய்யும் பார்ட் டைம் வேலை குறித்து நமக்கு தெரியும். ஆனால் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டே படிக்கும் பார்ட் டைம் படிப்பு குறித்து தெரியுமா? இதோ, பணி புரியும் மாணவப் பருவப் பெண் தொழிலாளர்களுக்கு கல்வி புகட்டும் முன் மாதிரியான முன்னெடுப்பை எடுத்து வருகிறது, கோவையில் உள்ள ஒரு பஞ்சாலை.
பஞ்சாலையில் காலை முதல் மாலை வரை அயராது பணி. மாலைக்கு மேல் தினமும் இரண்டு மணி நேரம் கல்லூரி படிப்பு. இப்படியாக பணிபுரியும் மாணவப் பருவ பெண்களுக்கு கல்வியை வழங்கி வருகிறது, கோவை மாவட்டம் தெக்கலூர் பகுதியில் உள்ள கே.பி.ஆர். குழும பஞ்சாலை நிர்வாகம். இங்கு தங்களது குடும்பத்தின் நிதிச் சுமையைப் போக்க பள்ளிப் படிப்பிற்குப் பின், பலர் பணிக்கு சேர்ந்துள்ளனர்.
இந்த பஞ்சாலையில் பெண் கல்வியியல் என்ற தனிப் பிரிவும், அதில் 65 ஆசிரியர்களும் பணி புரிந்து வருகின்றனர். சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த பஞ்சாலையில், பெண் கல்வியியல் பிரிவில் இதுவரை 31,000 க்கும் மேற்பட்ட மாணவிகள் திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தின் கீழ் பட்டம் பெற்றுள்ளனர். இதனால் பஞ்சாலை தொழிலாளிகளாக வரும் மாணவிகள் பட்டதாரிகளாக மாறி வருகின்றனர். பன்னாட்டு நிறுவனங்களிலும் சிலர் வேலை கிடைத்து பணியிலும் அமர்ந்துள்ளனர். திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் கீழ் இந்த பஞ்சாலையில் மாணவிகளுக்கு பல ஆண்டுகளாக கல்லூரி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடப்பாண்டு நடைபெற்ற திறந்தநிலை பல்கலைக் கழகத்திற்கான பட்டமளிப்பு விழாவில், இந்த பஞ்சாலையில் பகுதி நேரமாக பணிபுரிந்து பட்டம் பெற்றவர்களில் 8 தனித்தனிப் பிரிவுகளில் தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளனர். C. ப்ரீத்தி (B.A. Tamil), V. புவனேஸ்வரி ( BCA), V. தனலட்சுமி ( B.Com), சத்யா ( B.Com CA ), V.இலக்கியா ( B.Com CA ), V.ஹேமலதா ( B.Com CA ), K. சாவித்ரி ( BBA), M. நிவேதா ( BCA) ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர். குறிப்பாக BCA பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற நிவேதா என்ற மாணவிக்கு "CEMCA" (சிம்கா) என்ற விருதும் கிடைத்துள்ளது. கடந்த 29 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர். என். ரவி மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் மாணவிகளுக்கு தங்கப் பதக்கங்களை வழங்கினர்.
இது குறித்து மாணவி நிவேதா கூறுகையில், “குடும்ப நிதிச் சுமை காரணமாக பள்ளிப் படிப்பிற்குப் பிறகு உயர்கல்வி கிடைக்காது என்று நினைத்தேன். ஆனால், வேலைவாய்ப்புடன் கல்வியும் கிடைத்தது. இதனால், தற்போது தங்கப் பதக்கத்துடன் விருதையும் வென்றுள்ளேன்” எனத் தெரிவித்தார். பெண்கள் வேலையோடு நின்றுவிடாமல், கல்வி கற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காக மாணவிகளுக்கு கல்லூரி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாகவும், பல மாணவிகள் தங்கப் பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் பஞ்சாலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். பஞ்சாலை நிர்வாகத்தின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)