TNEB New Tariff: உயர்த்தப்பட்ட மின்கட்டணம் ; கோவை சிறு, குறு தொழில்துறையினர் கண்டனம்..
”கட்டண உயர்வை தமிழக மின்சார வாரியம் திரும்ப பெறவிட்டால் தமிழகத்தின் தொழில் துறையினர் தொழில் நடத்த முடியாமல் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு பிற மாநிலங்களோடு தொழில் போட்டியிட முடியாத சூழ்நிலை உருவாகும்”
தமிழ்நாட்டில் இன்று முதல் புதிய மின்கட்டணம் அமலுக்கு வந்துள்ளது. இதற்கான அனுமதியை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியிருந்தது. இதன்காரணமாக இன்று முதல் புதிய கட்டணம் அமலுக்கு வந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.புதிதாக உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தின் படி முதல் 100 யூனிட்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லை என்ற நிலை தொடரும். அதன்பின்னர் 200 யூனிட்டுகளுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 400 யூனிட் வரை பயன்படுத்தோவருக்கு மாதம் ஒன்றுக்கு 147.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மின்கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் என்ற டாக்ட் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அச்சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் ஜேம்ஸ் கூறுகையில், ”மின் கட்டணம் சம்மந்தமான அறிக்கை தமிழகத்தில் அனைத்து துறை சார்ந்தவர்களுக்கும் பெரும் அதிர்ச்சி தரும் விதத்தில் மின்சார வாரியம் தான் நினைத்த கட்டண உயர்வை நிறைவேற்றிக் கொடுப்பதற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி கொடுத்திருப்பது என்பது மிகுந்த வேதனை தருகிறது. கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தி மக்களிடம் கருத்து கேட்ட அனைத்து கூட்டங்களிலும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கட்டண உயர்வுக்கு முழு சம்மதம் கொடுத்திருப்பது மக்களை முட்டாளாக்கி இருக்கிறது.
தமிழகத்தில் தொழில்துறை கடுமையான நெருக்கடி இருக்கும் சூழ்நிலையில் 100% அளவுக்கு பல பிரிவுகளாக பிரித்து மின் கட்டணத்தை தற்பொழுது உயர்த்தி இருக்கின்றார்கள். இந்த மின் கட்டணத்தின் உயர்வு தமிழகத்தின் தொழில் வளர்ச்சி என்பது கடைகோடிக்கு கொண்டு செல்லும் என்பது மின்சார வாரிய அமைச்சரிடம் தொழில்துறையினர் பலமுறை முறையிட்டும் எந்தக் கருத்தையும் உள் வாங்கிக் கொள்ளாமல் மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கின்றார்கள்.
பீக் ஹவர்ஸ் சார்ஜஸ் விதிமுறைகளுக்குள் 3b கட்டணதாரர்களும் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் காலை 6 மணி முதல் 10 மணி வரை மாலை 6:00 மணி முதல் 10 மணி வரை உபயோகப்படுத்தும் மின்சாரத்துக்கு தனி மீட்டர் பொருத்தி கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் அவ்வாறு தனி மீட்டர் பொருத்தப்படும் வரை, ஒட்டுமொத்த கட்டணத்தில் கூடுதலாக 20 சதவீதம் கட்டணம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மின் கட்டணம் ரூபாய் ஆறு ஐம்பதில் இருந்து 7.50 ஆக ஒரு யூனிட்டுக்கு உயர்த்தப்பட்டுள்ளது அதே சமயம் பிக்சட் சார்ஜஸ் ரூபாய் 35 கிலோ வாட் மாதம் என்பதிலிருந்து ரூபாய் 75 கிலோ வாட் மாதத்திற்கு என அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பிற டெபாசிட் கட்டணங்களான EMD மற்றும் செக்யூரிட்டி டெபாசிட் போன்ற கட்டணங்கள் ரூபாய் 600 கிலோ வாட் என்பதிலிருந்து ₹900/கிலோ வாட் என அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக MCD என்று சொல்லப்படும் மீட்டர் பாதுகாப்பு கட்டணம் ரூபாய் 2700 இல் இருந்து 5200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டண உயர்வை தமிழக மின்சார வாரியம் திரும்ப பெறவிட்டால் தமிழகத்தின் தொழில் துறையினர் தொழில் நடத்த முடியாமல் கடும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு பிற மாநிலங்களோடு தொழில் போட்டியிட முடியாமல் தொழில் நடத்த முடியாத சூழ்நிலை உருவாகும். தமிழக முதலமைச்சர் இந்த கட்டண உயர்வை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.