"பீக் ஹவர் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்" - கோவை தொழில் அமைப்பினர் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
தொழில் அமைப்பினரின் 5 கோரிக்கைகளில் ஒரு கோரிக்கையை மட்டுமே அரசு நிறைவேற்றியுள்ளது. பீக் ஹவர் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட மீதமுள்ள 4 கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும்.
தமிழ்நாட்டில் பீக் ஹவர் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், மின்சார நிலைக் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், சோலார் பேனல் அமைக்க துணை கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும், இரண்டு ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது உள்ளிட்ட 5 கோரிக்கைகளை வலியுறுத்தி தொழில் அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு மின் பயனீட்டாளர் கூட்டமைப்பை சேர்ந்த தொழில் அமைப்பினர் உண்ணாவிரதம், வேலை நிறுத்த போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழில் கூடங்களில் கருப்பு கொடி ஏற்றி மின் கட்டண உயர்விற்கு எதிர்ப்பு தெரிவிக்க, தமிழ்நாடு மின் பயனீட்டாளர் கூட்டமைப்பினர் முடிவு செய்தனர். இதன்படி இன்று கோவை மாவட்டத்தில் 300 க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகளை சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்கூடங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறுகையில், "பொருளாதாரம் மந்த நிலை, மூலப் பொருட்களின் விலை உயர்வு, திறன்மிகு பணியாளர்களின் பற்றாக்குறை போன்ற பல இன்னல்களை தொழில்துறை சந்தித்து வரும் நிலையில், கடந்த வருடம் அதிகப்படியாக உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதுகுறித்து பலமுறை அரசிடம் முறையிட்டும் எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. ஆண்டுதோறும் உயர்த்தப்படும் மின் கட்டணம் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களை நிரந்தரமாக முடக்கிவிடும் அபாயம் உள்ளது.
மின் கட்டணம் தொடர்பான 5 கோரிக்கைகளை முன்வைத்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்திய நிலையில், அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அப்பேச்சுவார்த்தையில் தொழில் அமைப்பினரின் 5 கோரிக்கைகளில் ஒரு கோரிக்கையை மட்டுமே அரசு நிறைவேற்றியுள்ளது. பீக் ஹவர் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், மின்சார நிலைக் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், சோலார் பேனல் அமைக்க துணை கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும், இரண்டு ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது ஆகிய மீதமுள்ள 4 கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும். இக்கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து இன்று கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்” எனத் தெரிவித்தார்.