பொள்ளாச்சி அருகே சூறைக்காற்றுடன் கனமழை; சுமார் ஒரு லட்சம் வாழை மரங்கள் சேதம்
சூறை காற்றால் சுமார் ஒரு லட்சம் வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்து இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
கோடை காலம் என்பதால் தமிழ்நாடு முழுவதும் கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது. மழை இல்லாததால் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. கோவை மாவட்டத்திலும் கோடை வெயில் தகித்துக் கொண்டு இருக்கிறது. கோவையில் பல மாதங்களாக மழை பெய்யவில்லை. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வழக்கமாக மே மாதங்களில் பிற மாவட்டங்களை விட குறைவான வெப்பமே நிலவி வரும் கோவை, இந்த முறை மற்றும் மாவட்டங்களுக்கு போட்டியாக தினமும் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகின்றது. இதனிடையே கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இருப்பினும் கோவை மாநகர பகுதிகளில் மழை பெய்யவில்லை.
நள்ளிரவில் பெய்த கனமழை
இந்நிலையில் நேற்று கோவை மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு உண்டு என வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த சூழலில் நேற்று மதியத்திற்கு பிறகு வெயில் தணிந்து காணப்பட்டது. பின்னர் மாலை நேரத்தில் அரை மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது. கோவை பந்தய சாலை, பீளமேடு, கணபதி, மசக்காளிபாளையம், புலியகுளம், ராமநாதபுரம், சிங்காநல்லூர், காந்திபுரம் உட்பட நகரின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. நீண்ட இடைவேளைக்கு பிறகு மழை பெய்ததன் காரணமாக, பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து நள்ளிரவில் கோவை மாநகரப் பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் பரவலாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
வாழைகள் சேதம்
இதேபோல பொள்ளாச்சி பகுதியிலும் நேற்று கோடை மழை பெய்தது. பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்று வட்டார பகுதிகளில் காலையிலிருந்து வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வந்த நிலையில், பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் கடுமையான வெயிலின் தாக்கம் குறைந்து, கனமழை பொழிந்ததால் குளிர்ச்சி நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள வேட்டைக்காரன் புதூர், சேத்துமடை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழையால் ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட வாழைகள் சாய்ந்து சேதமடைந்தது. கடந்த ஆறு மாத காலமாக கடும் வரட்சி நிலவி வந்த சூழலில் பல லட்சம் ரூபாய்க்கு தண்ணீர் விலைக்கு வாங்கி ஊற்றி பயிரிட்ட வாழை மரங்களை காப்பாற்றிய விவசாயிகள், சூறை காற்றால் சுமார் ஒரு லட்சம் வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்து இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இதனால் சுமார் 75லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த விவசாயிகள், தங்களது நிலைமையை கருத்தில் கொண்டு விளை நிலைகளை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விவசாயிகள் விடுத்துள்ளனர்.