மாற்றுத்திறனாளி மகனுடன் ஆதரவின்றி தவித்த பெண் ; 24 மணி நேரத்தில் வீடு ஒதுக்கீடு செய்த கோவை ஆட்சியர்
தங்குவதற்கு இடமில்லாமல் தவித்த ஷீலாவிற்கும், அவரது மாற்றுத்திறனாளி மகனுக்கும் மணியம்மாள் என்ற 63 வயது மூதாட்டி அடைக்கலம் தந்து, தன்னுடைய வீட்டில் தங்கவைத்து 13 ஆண்டுகளாக உதவி புரிந்து வருகிறார்.
கோவை மாவட்டம் செட்டிபாளையம் பெரியார் நினைவு சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஷீலா. 44 வயதான இவர், மன வளர்ச்சி குறைபாடு உடைய மாற்றுத்திறனாளியான தனது 14 வயது மகன் ராமசாமி உடன் வசித்து வருகிறார். கணவர் கோபால் 13 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இதனைத் தொடர்ந்து தங்குவதற்கு இடமில்லாமல் தவித்த ஷீலாவிற்கும், அவரது மாற்றுத்திறனாளி மகனுக்கும் மணியம்மாள் என்ற 63 வயது மூதாட்டி அடைக்கலம் தந்து, தன்னுடைய வீட்டில் தங்கவைத்து 13 ஆண்டுகளாக உதவி புரிந்து வருகிறார். ஷீலாவும், அந்த மூதாட்டியும் உறவு முடை இல்லை என்றாலும், மனிதநேயத்துடன் தன்னுடன் தங்கவைத்து உறுதுணையாக இருந்து வருகிறார்.
மாற்றுத்திறனாளி மகனை எப்போதும் உடனிருந்து பார்த்துக் கொள்ள வேண்டிய நிலை இருப்பதால், ஷீலா வேலைக்கு செல்ல முடியாத நிலை இருந்தது. தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளி நல உதவி தொகை அவர்களுக்கு வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. மூதாட்டி மணியம்மாள் ஒரு ஹோட்டலில் பாத்திரம் கழுவும் வேலை செய்து கிடைக்கும் 6500 ரூபாய் ஊதியத்தை கொண்டு ஷீலாவிற்கும், அவரது மகனுக்கும் உதவி வந்துள்ளார். கடந்த அக்டோபர் மாதத்துடன் வயது மூப்பு காரணமாக அப்பணியில் இருந்து நின்ற மணியம்மாள், 4 ஆடுகளை வாங்கி பராமரித்து வருகிறார்.
இந்நிலையில் தனது காலத்துக்கு பின்னர் ஷீலாவும், அவரது மகனும் தங்குவதற்கு இடம் இல்லாமல் தவிப்பார்கள் என்பதால் அவர்களை அழைத்து கொண்டு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாமில் மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் மனு அளித்தார். அவர்களின் சூல்நிலையை கருத்தில் கொண்டு அம்மனு குறித்து உடனடியாக பரிசீலனை செய்த கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மனு அளித்த 24 மணி நேரத்திற்குள் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள குடியிருப்பில் உடனடியாக வீடு ஒன்றை ஒதுக்கி உத்தரவிட்டார். அந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஷீலா வசிக்கும் இடத்திற்கு நேரில் சென்று அவரிடம் வழங்கினார். மேலும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு செலுத்த வேண்டிய 36 ஆயிரம் ரூபாயை மாவட்ட ஆட்சியர் தன் விருப்ப நிதியிலிருந்து வழங்கினார்.
மனிதநேய அடிப்படையில் ஷீலா மற்றும் அவரது மகனுக்கு உதவி செய்து உறுதுணையாக இருந்த மணியம்மாளை ஆட்சியர் சமீரன் பாராட்டினார். அப்போது ஆதரவு இன்றி ஒரு காலத்தில் வீடு இன்றி தவித்த போது மணியம்மாளுக்கு 1.5 செண்ட் இடத்துடன் செட்டிபாளையம் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வீடு வழங்கி வாழ்வாதாரம் கொடுத்ததை மணியம்மாள் கண்ணீர் மல்க நினைவு கூர்ந்தார். மாற்றுத்திறனாளி மகனுடன் ஆதரவின்றி தவித்த பெண்ணுக்கு மனிதாபிமான அடிப்படையில் வீடு ஒதுக்கி கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனின் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்