’வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க லஞ்சம் ’ சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்
சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க 7 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்சமாக பெற்ற சிறப்பு காவல் ஆய்வாளர்
கோவை மாவட்டம் நெகமம் பகுதியில் சூதாடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க 7 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது காவல் துறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள மெட்டு பாவி கிராமத்தில் சிலர் சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த இரகசிய தகவல் நெகமம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றும் ஏசு பாலன் என்பவருக்கு கிடைத்துள்ளது. இதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஏசு பாலன், சூதாட்டில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைத்து பிடித்துள்ளார். அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க 7 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்சமாக பெற்றுள்ளார். மேலும் பணத்தை பெற்றுக் கொண்டு வழக்குப் பதிவு செய்யாமல் மூடி மறைத்துள்ளார்.
இந்நிலையில் சூதாடியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க ஏசு பாலன் 7 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்றது குறித்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினத்திற்கு புகார் சென்றுள்ளது. இது குறித்து விசாரித்த போது, வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ஏசு பாலன் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ஏசு பாலனை பணியிடை நீக்கம் செய்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவிட்டார்.
இதேபோல், கோவை மற்றும் சேலம் சரகத்திற்கு உட்பட்ட எட்டு மாவட்டங்களில் கடந்த 15 நாட்களில் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட சோதனையில், அனுமதியின்றி மதுபானம் மற்றும் சாராயம் விற்பனையில் ஈடுபட்டோர், கஞ்சா , போதைப்பொருள், லாட்டரி விற்பனை, மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டோர் மீது 1959 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3550 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 1,740 மதுவிலக்கு வழக்குகளில் 7,508 லிட்டர் சாராயம், 19,451 லிட்டர் ஊரல், 2,547 லிட்டர் கள், 1,12,197 லிட்டர் பிராந்தி ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 33 கஞ்சா வழக்குகளில் 43 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 56 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி, 19 லாட்டரி வழக்குகளில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்த வழக்குகளில் 110 நான்கு சக்கர வாகனங்களும், 455 இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்கு மண்டல ஐஜி சுதாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்கு மண்டல ஐஜியாக பதவியேற்றதில் இருந்து ரவுடிகளை ஒடுக்குதல், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்தல் போன்ற செயல்களில் சுதாகர் ஐபிஎஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்