கோவை சிறையில் ஐ.எஸ்.ஐ.எஸ் கொடி வரைந்த கைதி: உபா சட்டத்தில் வழக்குப்பதிவு
கோவை மத்திய சிறை ஜெயிலர் கடந்த நவம்பர் மாதம் 27ம் தேதி ஆசிப் முஸ்தகின் அறையினை சோதனையிட்ட போது, அவரது ஜீன்ஸ் பேன்ட் பாக்கெட்டில் இருந்த பேப்பரை கைப்பற்றினார்.
கோவை மத்திய சிறையில் பேனாவால் பேப்பரில் வரையப்பட்ட ISIS அமைப்பின் கொடியினை கைதி ஆசிப் முஸ்தகின் என்பவரிடம் இருந்து சிறைக் காவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆசிப் முஸ்தஹீன் (30) . இவர் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர் என்பது தெரிய வந்த நிலையில், ஈரோடு காவல் துறையினர் அவரை உபா எனப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் ஆசிப் முஸ்தஹீன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கோவை மத்திய சிறை ஜெயிலர் கடந்த நவம்பர் மாதம் 27ம் தேதி ஆசிப் முஸ்தகின் அறையினை சோதனையிட்ட போது, அவரது ஜீன்ஸ் பேன்ட் பாக்கெட்டில் இருந்த பேப்பரை கைப்பற்றினார்.
அதில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் கொடியினை வரைந்து வைத்து இருப்பது தெரியவந்த நிலையில், அதனை கைப்பற்றியதுடன், சிறை குறிப்பேடுகளில் இது குறித்து பதிவு செய்துள்ளார். நீதிமன்றத்திற்கு மனுக்களை எழுதுவதற்காக கொடுக்கப்பட்ட பேப்பர், பேனாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் கொடிகளை வரைந்து இருப்பதும்,இது இஸ்லாமிய அரசின் கொடி, இந்த கொடியை வைத்திருப்பதில் தவறில்லை என்றும் ஆசிப் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று ஜெயிலர் சிவராஜன் சிறை வளாகத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போது, விரைவில் சிறையிலிருந்து வெளியேறுவேன் எனவும், அப்போது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்காக ஜிஹாத் வேலையைத் தொடர்வேன் எனவும், அப்போது நீங்களும் இருக்க மாட்டீர்கள், சிறைச்சாலையும் இருக்காது என மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து ஜெயிலர் சிவராஜன் பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் ஐ.எஸ்.ஐ.ரெஸ் ஆதரவாளர் ஆசிப் முஸ்தஹீன் மீது மீண்டும் உபா சட்டம், கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் பந்தய சாலை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிப்பிடம் இருந்த கைப்பற்றபட்ட பேப்பர் கொடியினையும் காவல் துறையினரிடம் ஜெயிலர் ஒப்படைத்துள்ளார்.