"கேரள சகோதரர்கள் அன்புக்கு நன்றி" வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பியதற்கு மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பிய கேரள மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்பால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. முக்கிய பகுதிகள் பல இடங்களிலும் அடுத்த நாளே இயல்பு வாழ்க்கை திரும்பினாலும் வேளச்சேரி, மடிப்பாக்கம், மூலக்கொத்தளம், ஆவடி உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் கடுமையாக தேங்கியது. பல பகுதிகளில் ஒரு வாரம் வரை மின்தடை இருந்தது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பாதிப்பு தமிழ்நாடு அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி, நெல்லையில் கொட்டித் தீர்த்த பேய்மழையால் ஒட்டுமொத்த தூத்துக்குடியும், நெல்லையும் இதுவரை வரலாறு காணாத அளவுக்கு தத்தளித்தது. ஒரே மாதத்தில் மாநிலத்திலும் வடக்கிலும், தெற்கிலும் மாநிலம் மழையால் அவதிக்குள்ளானது தமிழக மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
കേരള സഹോദരങ്ങളുടെ സ്നേഹത്തിന് നന്ദി ❤️!@pinarayivijayan @CMOKerala pic.twitter.com/1pUufgCbxw
— M.K.Stalin (@mkstalin) December 23, 2023
இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு கேரளா மக்கள் வெள்ள நிவாரண பொருட்களை அனுப்பியுள்ளனர். கேரள மக்கள் வெள்ள நிவாரண பொருட்களை அனுப்பும் வீடியோவை தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அன்புக்கு நன்றி கேரள சகோதரர்களே என்று நன்றி தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு 6 ஆயிரம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டது. தற்போது தூத்துக்குடி, நெல்லையில் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கும் 6 ஆயிரம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கு ரூபாய் 1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக 35 பேர் உயிரிழந்துள்ளதாக தலைமைச் செயலாளர் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.