Stray Dogs in Chennai : “சென்னையில் எத்தனை தெரு நாய்கள் இருக்கின்றன தெரியுமா?” சும்மா கெஸ் பண்ணுங்க..!
”அந்த கணக்கெடுப்பில் இருக்கும் எண்களை பார்த்தால் கண்கள் சுற்றும். ஆம், நூற்றுக்கணக்கிலோ, ஆயிரக்கணக்கிலோ அல்ல சென்னையில் தெரு நாய்கள் இருப்பது லட்சக் கணக்கில்”
நாளொருமேனி பொழுதொரு வண்ணமாக, சென்னையில் தெருநாய்களின் தொல்லையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தெருநாய்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.
குரைக்கும் நாய் கடிக்காதா என்ன ?
முன்பெல்லாம் குரைத்துவிட்டு நகர்ந்துப்போய்விடும் நாய்கள், இப்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை துரத்தி துரத்தி கடிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றன. கல் எடுத்து வீசி, விரட்டினால் இன்னும் உக்கிரமாகி துரத்தும் நாய்களின் மன நிலையில் கொரோனா தொற்றுக்கு பிறகு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சில பிராணி ஆர்வலர்கள் கருதுகின்றார்கள். குரைக்கும் நாய் கடிக்காது என்ற பழமொழியெல்லாம் இப்போது செல்லாக்காசாக ஆகிவிட்ட நிலையில், குரைக்கிற நாயும் கடிக்கும் கடிக்கிற நாயும் குரைக்கும் என்ற புதுமொழி உருவாகிவிட்டது.
நாய்கள் ஜாக்கிரதை
பெரிய பங்களா வீட்டு கதவுகளில் மட்டுமே மாட்டியிருந்த “நாய்கள் ஜாக்கிரதை” போர்டை இப்போது ஒவ்வொரு தெருவிலும் மாட்டும் அளவிற்கு நாய்களின் உக்கிரம் அதிகரித்து வருகிறது. தெரு நாய் தானே என்று இன்று எந்த நாயையும் அலட்சியப்படுத்திவிட்டு கடந்து போய்விட முடியாது, இருசக்கர வாகனத்தில் சென்றாலும் நடந்து சென்றாலும் துரத்தி, துரத்தி கடிக்கும் வல்லமை பெரும்பாலான நாய்களுக்கு சமீபகாலமாக வாய்த்திருக்கிறது.
இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை
அதுவும் சென்னையில் சொல்லவே வேண்டாம். குழந்தைகளை கூட விட்டு வைக்காமல் கடித்து குதறிய காட்சிகளையெல்லாம் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம். ஒவ்வொரு முறையும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து அது பேசுபொருளாக ஆனபோதெல்லாம் நாய்களை மாநாராட்சி சார்பில் பிடிக்கும் முயற்சிகள் ஒரு சடங்குபோல இரண்டு நாட்களுக்கோ அல்லது ஒரு வாரத்திற்கு நடந்து முடிந்திருக்கும். ஆனால், அந்த நடவடிக்கைகள் முறையாக கண்காணிக்கப்பட்டு, தீவிரப்படுத்தப்படாததால் நாய்களின் இனப்பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
சென்னையில் இருக்கும் தெரு நாய்கள் எத்தனை தெரியுமா?
இந்நிலையில், சென்னையில் இருக்கும் தெருநாய்களை கணக்கெடுத்து அதனை அதிகாரப்பூர்வமாகவும் வெளியிட்டிருக்கிறது சென்னை மாநகராட்சி. அந்த கணக்கெடுப்பில் இருக்கும் எண்களை பார்த்தால் கண்கள் சுற்றும். ஆம், நூற்றுக்கணக்கிலோ, ஆயிரக்கணக்கிலோ அல்ல சென்னையில் தெரு நாய்கள் இருப்பது லட்சக் கணக்கில். சென்னை மாநகராட்சி புள்ளிவிவரப்படி சொல்வதென்றால், ஒரு லட்சத்து 81 ஆயிரம் நாய்கள் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித் திரிகிறது.
கருத்தடை செய்வதில் மெத்தனமா ?
இதற்கு முந்தைய கணக்கெடுப்பில் சென்னையில் வெறும் 58 ஆயிரம் தெரு நாய்களே இருந்த நிலையில், தற்போதைய கணக்கெடுப்பில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் நாய்களுக்கு மேல் பெருகியிருக்கிறது. இதற்கு காரணமாக, சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தனப்போக்குதான் என்றும் நாய்களுக்கு கருத்தடை முறையாக செய்வதில்லை என்றும் பெயருக்காக வெறும் கணக்கிற்காக மட்டுமே நாய் பிடிப்பது, கருத்தடை செய்வதும் நடக்கிறது என்று சென்னை வாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். அந்த குற்றச்சாட்டு சென்னை மாநகராட்சி அறிக்கை மூலம் உண்மை என நிரூபணம் ஆகியிருக்கிறது.
அம்பத்தூரில்தான் அதிக தெருநாய்கள்
மாநகராட்சி கணக்கெடுப்பின் படி அம்பத்தூர் பகுதியில் மட்டும் 23 ஆயிரத்து 980 நாய்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது, மாதவரத்தில் 16 ஆயிரம் நாய்களும் சோழிங்கநல்லூரில் 16, 195 தெரு நாய்களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இவற்றில் 27% நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நாய்களுக்கு 6 மாதத்திற்கு கருத்தடை செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டிருந்தாலும் அதற்குள் அவை பல்கி பெருகி இன்னும் அதிகளவில் இன பெருக்கம் செய்துவிடும் என்பது மக்களின் அச்சமாக இருக்கிறது.