Chess Olympiad : செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க விழாவுக்கு வரும் பிரதமர் மோடி...பாதுகாப்பு வளையத்திற்குள் சென்னை.. என்னென்ன ஏற்பாடுகள்?
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழாவுக்கு பிரதமர் மோடி வரவுள்ளதால், சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழாவுக்கு பிரதமர் மோடி வரவுள்ளதால், சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28ஆம் தேதி முதல் மாமல்லபுரத்தில் தொடங்குகிறது. இதற்கான ஆயத்த பணிகளை தமிழ்நாடு அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, வரும் 28-ஆம் தேதி சென்னை வருகிறார்.
நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரமதர் மோடி, மறுநாள் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொள்கிறார்.
தனி விமானம் மூலம் குஜராத்தில் இருந்து புறப்படும் மோடி, 28ஆம் தேதி மாலை 5 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நேப்பியர் பாலம் அருகில் உள்ள அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை வளாகத்தை சென்றடைகிறார். அங்கிருந்து செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நடைபெறும் நேரு உள் விளையாட்டு அரங்கத்துக்கு காரில் புறப்பட்டு செல்கிறார். வழிநெடுக பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
பிரதமரின் சென்னை பயணத்தை முன்னிட்டு, 28, 29 ஆகிய 2 நாட்களும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது. தேசிய பாதுகாப்பு படையினர், மத்திய - மாநில உளவு பிரிவு காவல்துறையினர், உள்ளூர் காவல்துறை அலுவலர்கள், ஆயுதப்படை காவல்துறையினர், தமிழ்நாடு சிறப்பு படை காவல்துறையினர் ஆகியோர் பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்க உள்ளனர்.
சென்னையில் 20,000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். நேரு உள்விளையாட்டு அரங்கம், அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை காவல்துறையினரின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுள்ளது.
ஐ.என்.எஸ். வளாகத்தில் இருந்து நேரு உள்விளையாட்டு அரங்கம் வரை சாலை மார்க்கமாக செல்லும் பிரதமரின் பாதுகாப்புக்காக 18 ஆயிரம் காவல்துறையினரும், விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கில் 4 ஆயிரம் காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
இதே போன்று கிண்டி ராஜ்பவனிலிருந்து அண்ணா பல்கலைக்கழகம் வரையில் பிரதமர் செல்லும் சாலைகளிலும் காவல்துறையினர் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பிரதமரின் பயணத்தை முன்னிட்டு விமான நிலைய அதிகாரிகள், காவல்துறையினர், வருவாய்துறை அலுவலர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் சென்னை விமானநிலையத்தில் இன்று பிற்பகல் நடைபெற உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்