விஜய் கூறுவதை ஏற்க முடியாது, அவருக்கு கல்லடி படத்தான் செய்யும் - சரத்குமார்
பொது வாழ்க்கை , மக்கள் சேவை என வந்து விட்டால் கல்லடி பட தான் செய்யும் அது தான் விஜய்க்கும் நடந்து கொண்டிருக்கிறது - சரத்குமார்
சரத்குமார் தலைமையில் சமத்துவ விருந்து
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் தனியார் திருமண மண்டபத்தில் தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் பாஜக முக்கியஸ்தருமான சரத்குமார் தலைமையில் சமத்துவ விருந்து நிகழ்ச்சி நடைப்பெற்றது. சமத்துவ விருந்தில் 300 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பாஜகவின் தீவிர உறுப்பினர் விண்ணப்ப படிவத்தை பாஜக மாநில செயலாளர் கேசவ விநாயகத்திடம் சரத்குமார் வழங்கினார்
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார்
கட்சியில் பொறுப்புக்காக இணையவில்லை. பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் இணைந்தேன்.
கிண்டி மருத்துவர் பாலாஜி குத்தப்பட்ட சம்பவம் குறித்து பேசுகையில்
மன அழுத்தத்தால் மருத்துவர் பாலாஜியை விக்னேஷ் தாக்கியுள்ளார். இந்த தாக்குதல் தவறானது. இறைவனுக்குப் பிறகு மருத்துவர்கள் தான் உயிரை காப்பாற்றுபவர்கள். நான் இன்று உயிரோடு இருப்பதற்கு தெய்வம் ஒருபுறம் இருந்தாலும் மற்றொருபுறம் மருத்துவர்கள்தான் காரணம். மருத்துவர்களுக்கு உரிய மரியாதை என்றும் வழங்கப்பட வேண்டும். விக்னேஷின் தாயார் கூறும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தீவிரமாக விசாரிக்க வேண்டும். தமிழகத்தில் போதை பொருள் பழக்கம் தீவிரமாக உள்ளது.
உதயநிதி துணை முதலமைச்சர் ஆக என்ன செய்திருக்கிறார் என்று கூறினால் அவரது செயல்பாடுகளை பற்றி கூறலாம். கலைஞரின் பேரன் , முதல்வர் ஸ்டாலின் மகனாக உதயநிதி ஸ்டாலின் வளம் வந்து கொண்டிருக்கிறார்.
நடிகர் விஜய் கூறுவதை ஏற்க முடியாது
விஜய் அரசியல் வந்தது வரவேற்கத்தக்கது. அரசியலுக்கு வருவது ஜனநாயக கடமை , யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று தான் என விஜய் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மற்ற கட்சிகளை விட விஜய் எவ்வாறு மாறுபட்டு செயல்பட போகிறார் என்பது போகப் போக தான் தெரியும். விஜய் பல கூட்டங்களை நடத்தி, பத்திரிகையாளர்களை சந்தித்து தான் என்ன செய்யப் போகிறோம் என்பதை பற்றி விளக்க வேண்டும். அரசியல் இயக்கமாக விஜய் ஆரம்பித்த பிறகு யாரையாவது தாக்க வேண்டும் என்ற காரணத்தினாலே மத்திய , மாநில அரசுகளை விஜய் தாக்கி பேசியுள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி ?
தமிழ்நாட்டில் பாஜக ஒருங்கிணைப்பு குழு எச். ராஜா தலைமையில் சிறப்பாக செயல்படுகிறது. தமிழ்நாட்டில் 2026 இல் பாஜக ஆட்சி அமைக்கும் என்பது தெளிவாக தெரிகிறது. அதிமுக பாஜக கூட்டணி மறுபடியும் சாத்தியமா என்பது அண்ணாமலைக்கு தான் தெரியும். பொது வாழ்க்கை , மக்கள் சேவைக்கு வந்த பிறகு கல்லடி பட தான் செய்யும். அதுதான் இப்போது விஜய்க்கும் நடந்து கொண்டிருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி கரப்பான் பூச்சி - அரசியல் நாகரீகமற்ற பேச்சு
அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுக்க இரண்டு மாத காலம் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. தனியார் மருத்துவமனைகளை நோக்கி மக்கள் செல்லும் நிலைமை மாறி அரசு மருத்துவமனையை நோக்கி நகர வேண்டும். திராவிடத்தை தான் அசைக்க முடியாது என உதயநிதி கூறினார் தமிழர்களை உதயநிதியால் அசைக்க முடியாது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை கரப்பான் பூச்சி என முதலமைச்சர் கூறுவது அரசியல் நாகரீகம் அற்றது.
தமிழ்நாட்டில் திமுக அதிமுக வாக்கு சதவீதம் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் பாஜக தனித்து 11 சதவீதத்துக்கு மேல் வாக்குகளை பெற்றுள்ளது. பாஜகவில் கடுமையாக உழைப்பவர்கள் உள்ளார்கள். தேசம் உயர வேண்டும் எனவும் தேசத்திற்காக உழைப்பவர்களும் பாஜகவில் கடுமையாக உழைத்து வருகிறார்கள். உச்ச நடிகராக இருந்தபோதுதான் நான் நடிப்பை விட்டு விட்டு அரசியலுக்கு வந்தேன். உழைப்பு உறுதி இருந்தால் எதுவும் சாத்தியம் என தெரிவித்தார்.
ஆகாயத்தாமரை அகற்றப்பட வேண்டிய ஒன்று
ஆகாயத்தாமரையை தான் தாமரை அகற்றப்பட வேண்டும் என சேகர் பாபு மாற்றி சொல்லி விட்டார். ஆகாயத்தாமரை அகற்றப்பட வேண்டிய ஒன்று. தாமரை என்பது மலரத்தான் செய்யும் அது மேலும் சிறப்பாக தான் மலரும். அடுத்தாண்டு ஜூலைக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் அண்ணாமலையோடு சுற்றுப்பயணம் செல்ல முடிவு செய்துவிட்டேன். பாஜக தமிழ்நாட்டில் வெற்றி பெற உண்மையாக உழைக்க களத்தில் இறங்க உள்ளேன் என தெரிவித்தார்.