மக்களே.. சென்னையை விட்டு வெளிய வந்துடாதீங்க..! புறநகர்ப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்...!
ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தாம்பரம் ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது
ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தாம்பரம் ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
2 மணி நேரத்திற்கு மேலாக ஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் அவதி
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக இருந்து வருகிறது. அதீத வளர்ச்சியை நோக்கி பயணித்து வரும் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 5 சிப்காட் பூங்காக்களில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் உள்ளதால், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, திருவள்ளூர் சாலை, செங்கல்பட்டு சாலை, தாம்பரம் சாலை என அனைத்து சாலைகளிலும் கணிசமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில் இன்று திடீரென ஒரே நேரத்தில் ஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம் சாலையில் தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் அதிக அளவில் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலால் ஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம் சாலையில் ஐந்து கிலோ மீட்டருக்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் ஐந்து நிமிடத்தில் கடக்க வேண்டிய தூரத்தை 1 மணி நேரம் காத்திருந்து கடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அனைவரும் அவதிக்கு உள்ளாகினர். இந்த கடும் போக்குவரத்து நெரிசலானது சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து நீடித்தது.
இது தவிர ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அவசர உதவிக்காக செல்லக்கூடிய ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.
எனவே ஸ்ரீபெரும்புதூர் - செங்கல்பட்டு சாலை, ஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம் சாலையில் போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோன்று தொடர் விடுமுறை எதிரொலியாகவும் போக்குவரத்து நெரிசல் சற்று அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை - திருச்சி பிரதான சாலையிலும் போக்குவரத்து நெரிசல்
தொடர் விடுமுறை மற்றும் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் சென்னையிலிருந்து, வெளியேறும் வாகனங்களின் எண்ணிக்கை சற்று அதிகரிக்க துவங்கியுள்ளது. இதன்காரணமாக குரோம்பேட்டை, தாம்பரம் ,பல்லாவரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையிலும் பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பணி முடித்துவிட்டு தாம்பரத்திலிருந்து, செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்லும் பொது மக்கள் பலரும் பேருந்துகளில் செல்வதை விட்டுவிட்டு சென்னை புறநகர் ரயில்களை நாடி உள்ளனர்.