நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ரவுடியை வெட்டிய கும்பல்

நண்பனின் பழி ; சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல் !! பரபரப்பு விசாரணை
சென்னை கொருக்குப்பேட்டை இளைய முதலி தெரு பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் ( எ ) பிஸ்கட் சந்தோஷ் ( வயது 23 ) சரித்திர பதிவேடு ரவுடியான இவர் மீது எட்டு குற்ற வழக்குகள் உள்ளன. கொருக்குப்பேட்டை காவல் நிலைய குற்ற வழக்கு ஒன்றில் சமீபத்தில் சந்தோஷ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அந்த வழக்கில் ஜாமீன் பெற்று , மாலை சிறையில் இருந்து வெளியே வந்தார். புழல் சிறையில் இருந்து தனது நண்பர் கிஷோருடன் இருசக்கர வாகனத்தில் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி சாலை வழியாக வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த சுமார் ஐந்து பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தை வழி மறித்து சந்தோஷை சரமாரியாக வெட்டினர். இதில் சந்தோஷிக்கு பலத்த வெட்டு காயமடைந்து மயக்கமடைந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து எம்.கே.பி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். எம்.கே.பி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சந்தோஷை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொருக்குப்பேட்டையில் கடந்த 2024 - ம் ஆண்டு ஸ்வீட் தினேஷ் என்பவனை தற்போது வெட்டுப்பட்ட சந்தோஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை செய்துள்ளனர்.
ஸ்வீட் தினேஷ் கொலைக்கு பழி வாங்குவதற்காக காத்திருந்த அவரது நண்பர்கள் சந்தோஷ் சிறையில் இருந்து வெளியே வருவதை அறிந்து அவரை கொலை செய்வதற்காக காத்திருந்து அவரை சரமாரியாக வெட்டியது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து கொருக்குப்பேட்டை ஏகாம்பரம் தெரு பகுதியைச் சேர்ந்த லோகு என்கின்ற லோகேஷ் ( வயது 21 ) ஜீவா என்கின்ற விரல் ஜீவா ( வயது 21 ) தினேஷ் ( வயது 22 ) அருள் சுரேந்தர் ( வயது 19 ) ஆகிய நான்கு பேரை எம்.கே.பி நகர் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நான்கு பேரும் கொருக்குப்பேட்டை பகுதியில் கொலை செய்யப்பட்ட ஸ்வீட் தினேஷின் நண்பர்கள் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நண்பரின் கொலைக்கு பழி வாங்குவதற்காக பிஸ்கட் சந்தோஷை வெட்டியதாக அவர்கள் வாக்கு மூலம் அளித்துள்ளனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமும் எம்.கே.பி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





















