Cyclone Michaung: மிக்ஜாம் புயலால் கொட்டித் தீர்த்த கனமழை! வடிந்தும், வடியாமலும் காட்சி தரும் சென்னை சாலைகள்..
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழையால் சாலைகளில் தேங்கிய தண்ணீர் பல இடங்களில் அகற்றப்பட்டாலும், சில இடங்களில் அகற்றப்படவில்லை.
வங்கக்கடலில் உருவாகிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த மழை, நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை விடாமல் கொட்டித் தீர்த்தது. இந்த பெருமழையால் சென்னையில் வரலாறு காணாத மழை பெய்தது.
மிக்ஜாம் புயல்:
இந்த பெருமழையால் அண்ணாசாலை, அண்ணாநகர், ஆலந்தூர், வடபழனி, வளசரவாக்கம், விருகம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர், கோயம்பேடு, கிண்டி, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி என சென்னை முழுவதும் தண்ணீர் ஆறாக சாலைகளில் ஓடியது. சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் உடனடியாக சாலைகளில் தேங்கிய தண்ணீரை அப்புறப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.
பல இடங்களில் சூறைக்காற்று வீசியதால் மரங்கள் சாய்ந்து விழுந்தது. இந்த நிலையில், நேற்று மாலை முதல் சாலைகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகளும், சாய்ந்து விழுந்த மரங்களை அகற்றும் பணியிலும் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்கனவே சென்னையில் 16 ஆயிரம் பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்ட நிலையில், அவர்களது திறம்பட பணியால் பல இடங்களில் தண்ணீர் வடிந்தது.
அகற்றும் பணிகள் தீவிரம்:
குறிப்பாக, வெள்ளம்போல நேற்று காட்சி தந்த அண்ணாசாலையில் தண்ணீர் முற்றிலும் வடிந்து இன்று இயல்பு நிலைக்குத் திரும்பியது. மேலும், தண்ணீர் அதிகளவில் தேங்கி காட்சி தந்த ஆலந்தூர், கிண்டி, ராயப்பேட்டை, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் தண்ணீர் வடிந்தது. மழைநீர் நன்றாக வடிந்த பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
வற்றாத மழைநீர்:
அதேசமயம், வழக்கமாக மழை அதிகமாக பெய்தால் பாதிப்பிற்குள்ளாகும் வேளச்சேரி, தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் ஆகிய பகுதிகளில் தண்ணீர் இன்னும் வடியவில்லை. இதனால், அந்த பகுதிகளில் உள்ள மக்கள் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வட சென்னையில் உள்ள மிண்ட், கொடுங்கையூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகளில் தேங்கிய மழைநீர் இதுவரை வடியவில்லை. இதனால், அந்த பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் உள்ள முக்கிய சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த பகுதிகளில் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மேலும், சென்னை நகரின் முக்கிய பகுதிளில் ஒன்றான அரும்பாக்கத்தில் தண்ணீர் இன்னும் வடியவில்லை என்று தெரியவந்துள்ளது. இதனால், அரும்பாக்கம் வழியாக வட பழனியில் இருந்து கோயம்பேடு செல்ல முடியாத சூழலில் வாகன ஓட்டிகளும், அப்பகுதியில் வசிப்பவர்களும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னை விமான நிலையம் இன்று காலை வரை கனமழை காரணமாக மூடப்பட்டிருந்தது. மழைநீர் தேங்கிய பகுதிகளில் வடிந்த தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: Chennai Rain Flood Warning: சென்னைவாசிகளே..! பெருமழை விட்டாலும், நீங்கள் இப்போது செய்யக்கூடாதவை இதுதான்..!
மேலும் படிக்க:Cyclone Michaung: மிக்ஜாம்: கடற்கரையில் துள்ளி குதிக்கும் மீன்கள்! பை பையாக அள்ளிச்செல்லும் பொதுமக்கள்! - வைரல் வீடியோ