(Source: ECI/ABP News/ABP Majha)
செல்போனை திருடியதாக நினைத்து மதுபோதையில் நண்பரை கொன்ற 2 பேர் போலீசில் சரண்
நண்பன் செல்போன் திருடியதாக நினைத்து மது அருந்தும்போது சண்டையிட்டு நண்பனை கொலை செய்து சரணடைந்துள்ள செயலாளர் அந்த பகுதியில் பரபரப்பு
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் அருண் (40). சென்னை துரைப்பாக்கத்தில் வாடகை வீட்டில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார். இவருடன், துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த சதீஷ் (40), விஜய் (எ) மணி (39) ஆகியோர் வேலை செய்து வந்தனர். நண்பர்களான இவர்கள் மூவரும், தினமும் வேலை முடிந்ததும் செம்மஞ்சேரி ராஜிவ்காந்தி சாலையில் இருந்து எழில் நகர் செல்லும் சாலை அருகே உள்ள முட்புதரில் மறைவாக அமர்ந்து மது அருந்துவது வழக்கம். அடிக்கடி இதே பகுதியில் அவர்கள் அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அதேபோல இம்மாதம் கடந்த 11 ஆம் தேதி வேலை முடிந்ததும் மூவரும் வழக்கம்போல் அந்த முட்புதர் அருகே அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது, போதையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சதீஷும், விஜய்யும் சேர்ந்து அருணை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர், அருகில் கிடந்த கல்லை எடுத்து அருண் தலையில் போட்டுள்ளனர். இதில், படுகாயமடைந்த அவர் மயங்கி சரிந்தார். இதையடுத்து அங்கிருந்து இருவரும் தப்பியுள்ளனர். சிறிது நேரம் கழித்து மீண்டும் அங்கு வந்து பார்த்தபோது அருண் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. உடனே, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
கடந்த 5 நாட்களாக இதுபற்றி யாரிடமும் கூறாத அவர்கள், காவல்துறை எப்படியும் நம்மை கைது செய்துவிடுவார்கள் என அச்சமடைந்து காவல் நிலையத்தில் சரணடைய முடிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட இருவரும் நேற்று வழக்கறிஞர் ஒருவருடன் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதையடுத்து, போலீசார் 2 பேரையும் கைது செய்து, கொலை நடந்த இடத்துக்கு அழைத்து சென்றனர். அவர்கள் காட்டிய இடத்தில், அழுகிய நிலையில் இருந்த அருணின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறையிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அருண் தங்களது செல்போனை திருடியதாக எண்ணி திட்டம் தீட்டி அருணை மதுகுடிக்க அழைத்து சென்றதும், அங்கு அருணிடம் தகராறில் ஈடுபட்டபோது ஆத்திரத்தில் அருண் தலையில் கல்லை போட்டு விட்டு சென்று விட்டதாகவும், அடுத்த நாள் வந்து பார்த்த போது இறந்தது தெரியவந்ததால் சரணடைய சென்றதாக வாக்குமூலம் அளித்ததாக கூறி உள்ளனர். நண்பன் செல்போன் திருடியதாக நினைத்து மது அருந்தும்போது சண்டையிட்டு நண்பனை கொலை செய்து சரணடைந்துள்ள செயலாளர் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.