Chennai Red Alert: 21 ஆயிரம் பேர்! சென்னையில் அடுத்த 4 நாட்களுக்கு ரெடி - மாநகராட்சி ப்ளான் இதுதான்!
சென்னையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாநகராட்சி பணியாளர்கள் 21 ஆயிரம் பேர் அடுத்த 4 நாட்களுக்கு தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் சூழலில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகியது. இதன் காரணமாக சென்னை உள்பட தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் நாளை மறுநாள் மிக அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட்:
ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் சென்னைவாசிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். கடந்த காலத்தில் புயல் மற்றும் பெருமழை காரணமாக சென்னையில் ஏற்பட்ட மோசமான அனுபவங்கள் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.
20 செ.மீட்டர் வரை மழை பெய்யும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக துணை முதலமைச்சர் கூறியிருந்த நிலையில், பேரிடர் மீட்பு குழுக்கள், தன்னார்வலர்கள், அதிகாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
21 ஆயிரம் பணியாளர்கள்:
பேரிடர் காலத்தில் எப்போதும் முக்கிய பங்கு வகிக்கும் தூய்மைப் பணியாளர்களையும் தயார் நிலையில் இருக்குமாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 4 நாட்களுக்கு மாநகராட்சி ஊழியர்கள் அனைவரும் சுழற்சி முறையில் பணியாற்ற சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மாநகராட்சியின் கீழ் பணியாற்றும் 21 ஆயிரம் ஊழியர்களும் சுழற்சி முறையில் பணியாற்ற மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்யும் என்பதால் சிறப்பு உதவி எண்கள், செயலிகளை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாடு அறையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு தேவைப்படும் உதவிகளை அந்த கட்டுப்பாட்டு எண்களை தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளலாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநகராட்சி ஏற்பாடுகள்:
மேலும், மழைநீர் அதிகளவு தேங்கும் இடங்களில் உடனடியாக மழைநீரை அப்புறப்படுத்த மோட்டார் பம்புகள், ஊழியர்களை தயார் நிலையில் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. மேலும், தண்ணீர் தேங்கும் இடங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது.
மெட்ரோ பணிகள் காரணமாக ஏற்கனவே சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் இருப்பதால், மழை காரணமாக அந்த பகுதியில் அதிகளவு மழைநீர் தேங்காமல் இருப்பதற்கும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடையாறு ஆற்றின் முகத்துவார தூர்வாரும் பணியை நேரில் சென்று நேற்று ஆய்வு செய்தார்.