Mayor Priya: ”பேட்ச் ஒர்க் வேண்டாமே” சென்னை மேயர் பிரியாவிற்கு கோரிக்கை - உயிர்களை காக்க ”தரமான சாலைகளே அவசியம்”
Mayor Priya: சென்னையில் சேதமடைந்துள்ள சாலைகள் இம்மாதம் முதல் சரி செய்யப்படும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
Mayor Priya: சென்னையில் சாலைகளை சீரமைப்பதாக மேற்கொள்ளப்படும் ”பேட்ச் ஒர்க்” வேண்டாம் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
சாலை விபத்துகளில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்:
மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல்களின்படி, 2020ம் ஆண்டில் நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 49,844 சாலை விபத்துகள் நடந்துள்ளன. 14,527 பேர் உயிரிழந்துள்ளனர். 2021ம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடந்த 55,682 விபத்துகளில் 15,384 பேர் உயிரிழக்க, 2022ம் ஆண்டில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த 64,105 சாலை விபத்துகளில் 17,884 பேர் உயிரிழந்துள்ளனர். இப்படி தேசிய அளவில் சாலை விபத்துகளில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. மாவட்ட அளவில் 2023 ஆம் ஆண்டில் சென்னை மற்றும் கோவையில் தலா 3,642 விபத்துகள் பதிவான நிலையில், சென்னையில் 500 பேரும், கோவையில் 1,040 பேரும் விபத்துகளில் பலியானதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு வாகனம் ஓட்டும்போது ஏற்படும் கவனக்குறைவு மட்டுமே காரணமல்ல. மோசமான சாலைகளும் உயிரை பறிக்கும் விபத்துகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, விபத்துகளை குறைக்கவும் உயிரிழப்புகளை தடுக்கவும் தரமான சாலைகளை அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
மேயர் பிரியா சொல்வது என்ன?
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா, “ஒவ்வொரு ஆண்டும் தனியாக நிதி ஒதுக்கப்பட்டு சாலைகள் போடப்பட்டு வருகின்றன. நவம்பர், டிசம்பர் மாதம் பெய்யும் மழையால் சாலைகள் குண்டும் குழியமாக மாறிவிடுகிறது, மாநகராட்சி சார்பில் ஐந்தாயிரம் பகுதிகள் கண்டறியப்பட்டு 3 பகுதிகளில் பேட்ச் ஒர்க் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. பேட்ச் ஒர்க் செய்ய சூழல் இல்லாத சாலைகளில் புதிதாகவே சாலை போட்டு வருகிறோம் தற்போது தான் மழை முடிந்திருக்கிறது இந்த மாதம் முதல் சாலைகள் போடப்படும்” என தெரிவித்துள்ளார்.
பலன் தராத ”பேட்ச் ஒர்க்”
சென்னையின் பல பிரதான சாலைகள் கூட, முழுமையாக மறுசீரமைக்கப்படாமல் பேட்ச் ஒர்க் செய்யப்பட்டே காணப்படுகிறது. இந்த பேர்ச் ஒர்க்கால் சாலைகள் சீராகிறதா? என கேட்டால் இல்லை என்பதே பொதுமக்களின் பதிலாக உள்ளது. மழையால் சாலைகள் குண்டும், குழியுமாக மாறுகிறது என்றால், பேட்ச் ஒர்க்கால் சாலைகள் மேடும் பல்லமுமாக உருப்பெறுகின்றன. இரவு நேரங்களில் அல்லது முதல்முறையாக ஒரு சாலையில் பயணிப்பவர்கள், இந்த பேட்ச் ஒர்க்கால் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர். இருசக்கர வாகனத்தில் குடும்பத்துடன் செல்லும்போது, இந்த பேட்ச் ஒர்க்குகள் உயிருக்கே ஆபத்தாகின்றன. மறுபுறம் இந்த பேட்ச் ஒர்க் தரமானதாக இருக்கிறதா? என்றால் அதுவும் இல்லை. அதுதொடர்பான பணிகள் முடிந்த ஒரு சில வாரங்களிலேயே குழி மற்றும் பள்ளங்களில் நிரப்பபடும் தார் ஜல்லி பெயர்ந்து வந்துவிடுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமப்படுவதோடு, அரசுக்கும் வீண் செலவு தான் அதிகரிக்கிறது.
அவதியில் சென்னை மக்கள்:
குண்டும் குழியுமான சாலைகளால் சென்னையில் சாலை விபத்துகள் ஏற்படுவது என்பது தொடர்கதையாகி வருகிறது. இளைஞர்கள் தொடங்கி முதியவர்கள் அவரை அடுத்தடுத்து, மோசமான சாலைகளால் விபத்தில் சிக்குவதை தினசரி செய்திகளில் பார்க்க முடிகிறது. ஏற்கனவே, நகரின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகளால் சாலைகள் மோசமடைந்துள்ளன. வேலைக்கு செல்லும் நபர்கள் காலையிலும், மாலையிலும் புழுதி பறக்கும் சாலைகளில் வேர்த்து விறுவிறுத்து பயணிக்கின்றனர். அதில் மேலும் சிரமத்தை சேர்க்கும் வகையில் தான் இந்த ”பேட்ச் ஒர்க்” முறையும்.
”தரமான சாலைகளே தேவை”
விபத்துகளை குறைக்கவும் உயிரிழப்புகளை தடுக்கவும், அரசு கூடுதல் கவனம் செலுத்தி, நீண்ட கால தீர்விற்காக தரமான சாலைகளை அமைப்பதே நல்ல தீர்வாக இருக்கும். அதைவிடுத்து இடைக்கால தீர்வாக பேட்ச் ஒர்க் செய்வது, மக்களின் வரிப் பணத்தை வீணடிக்கும் செயல் என்பதோடு, மக்களின் உயிரின் மீது அக்கறையற்ற மனப்பான்மையையே காட்டும். எனவே, பேட்ச் ஒர்க் வேண்டாம், தரமான சாலைகளே வேண்டும் என்பதே சென்னை மக்களின் கோரிக்கையாக உள்ளது.