சென்னைக்குள் இ பதிவு இல்லாமல் பயணிக்கலாம் : தெரிந்துகொள்ளவேண்டியவை என்ன?
சென்னையில் நாளை முதல் பொதுமக்கள் பயணம் செய்வதற்கு எந்தவித இ-பதிவும் தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் வரும் 21-ந் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கை அமல்படுத்தி தமிழக அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஊரடங்கை வரும் 28-ந் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசின் இந்த புதிய உத்தரவுப்படி தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களும் மூன்று வகைககளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் வகையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் அதே கட்டுப்பாடுகள் வரும் 28-ந் தேதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் ஓரளவு குறைந்துள்ள மதுரை, விருதுகர், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்பட 23 மாவட்டங்கள் இரண்டாவது வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் கடைகள் திறப்பதற்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சில கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மூன்றாவது வகையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைவாக காணப்படுகிறது. இந்த மாவட்டங்களில் இரண்டாவது வகை மாவட்டங்களில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் பொதுப்போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அரசு பேருந்துள் மற்றும் தனியார் பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், குளிர்சாதன வசதி இல்லாமலும் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவைக்கும் தமிழக அரசு சென்னையில் அனுமதித்துள்ளது. மெட்ரோ ரயிலில் 50 சதவீத பயணிகளுடன் அனுமதிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வாடகை வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிக்கவும் தமிழக அரசு அனுமதித்துள்ளது. இந்த பயணங்களின்போது இ பதிவு இல்லாமல் பொதுமக்கள் பயணிக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. வாடகை டாக்சிகளில் பயணிகள் இல்லாமல் மூன்று பயணிகளும், ஆட்டோக்களில் பயணிகள் இல்லாமல் இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
சென்னையில் நேற்றைய நிலவரப்படி சுமார் 460 நபர்களுக்கு மட்டுமே புதியதாக கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த நிலையில், நாளை முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் எந்தவித இ-பதிவும் இல்லாமல் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் ஜூன் மாதம் தொடக்கம் முதல் கொரோனா பரவல் கட்டுக்குள் வருவதால் அடுத்தடுத்த ஊரடங்கு நீட்டிப்புகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது. நேற்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் 8 ஆயிரத்து 183 நபர்களுக்கு என்ற அளவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைவாக பதிவானதையடுத்து, தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை தற்போது அறிவித்துள்ளது.
.