Chennai Book Fair: சீக்கிரம் கிளம்புங்க..! இன்றுடன் நிறைவடைகிறது சென்னை புத்தக கண்காட்சி
Chennai Book Fair: சென்னையில் நடைபெற்று வரும் 46வது புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு பெற உள்ளது.
புத்தக வாசிப்பாளர்களுக்கான முக்கிய திருவிழாவாக கருதப்படும், நடப்பாண்டிற்கான சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது. அங்கு, கடந்தாண்டை காட்டிலும் கூடுதலாக 200 அரங்குகள் அமைக்கப்பட்டு, மொத்தமாக 1000 அரங்குகள் பல்வேறு புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் ரூ.15 கோடி மதிப்பிலான புத்தகங்கள் சென்னை புத்தக கண்காட்சியில் விற்பனையாகின. கொரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டபின் நடைபெற்ற, நடப்பாண்டின் புத்தக கண்காட்சியில் கடந்த ஆண்டை காட்டிலும் ஏராளமான வாசகர்கள் குவிந்தனர். இதன் காரணமாக, நடப்பாண்டில் புத்தக விற்பனை கணிசமாக உயர்ந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை புத்தக கண்காட்சி
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புத்தக கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 46வது புத்தக கண்காட்சிகடந்த 6ம் தேதி தொடங்கியது. 16 நாட்கள் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில், பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்துவதோடு, 10 சதவிகித விலையிலும் புத்தகங்கள் விற்கப்படுகின்றன. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார். தொடர்ந்து, புத்தக கண்காட்சி தினமும் காலை 11 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை நடைபெற்று வருகிறது.
என்ன சிறப்புகள்?
சென்னை புத்தக கண்காட்சிக்காக கடந்தாண்டு 800 அரங்குகள் அமைக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டு கூடுதலாக 200 அரங்குகள் அமைக்கப்பட்டன. அதேசமயம் முதன்முறையாக திருநங்கையர் நடத்தும் பதிப்பகத்திற்கு அரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதேபோல் 40க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்ட தமிழ்நாடு அரசு சார்பிலான சர்வதேச புத்தக கண்காட்சியும் ஜனவரி 16,17 மற்றும் 18 ஆகிய 3 நாட்கள் நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக புத்தக கண்காட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக பங்கேற்க முடியாமல் இருந்த புலம்பெயர் எழுத்தாளர்கள், தமிழர்கள் என பலரும் நடப்பாண்டு புத்தக கண்காட்சியில் பங்கேற்றனர்.
புத்தக வாசிப்பாளர்களை சந்திக்க ஏராளமான எழுத்தாளர்களும் வருகை தந்தனர். கண்காட்சியின் ஒவ்வொரு நாள் மாலையிலும் கருத்தரங்கம், பட்டிமன்றம் போன்றவை நடைபெற்றதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் சென்னை புத்தக கண்காட்சி ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.
குவியும் வாசகர்கள்:
சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற்றதன் காரணமாக இந்தாண்டு தொல்லியல் அரங்குகள் அமைக்கப்படவில்லை. அதேபோல் 20 முதல் 40 புத்தகங்கள் வைத்திருப்பவர்களுக்கு மினி ராக் சிஸ்டம் முறை அறிமுகம் செய்யப்பட்டது. புத்தகங்கள் வாங்குபவர்கள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த வசதியாக நெட்வொர்க் பிரச்சினை ஏற்படாமல் ஜியோ, ஏர்டெல் நெட்வொர்க் டவர்கள் அமைக்கப்பட்டன. அதேபோல் பிஎஸ்என்எல் சார்பில் வைஃபை சேவையும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மற்றவர்களுக்கு நுழைவு கட்டணமாக ரூ.10ம் வசூலிக்கப்படும் நிலையில், பள்ளிகள் மூலம் வரும் மாணவர்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். கடந்தாண்டு புத்தக காட்சியை 30 லட்சம் பேர் பார்வையிட்ட நிலையில் இந்தாண்டு கடைசி நாளான இன்றுடன் சேர்த்து 50 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.