பொன்னேரி-தச்சூர் போக்குவரத்து தடை.. மீறினால் அபராதம்.. வண்டலூர் வெளிவட்டச்சாலை பயன்படுத்த அறிவுறுத்தல்..
"பொன்னேரி -தச்சூர் -பொன்னேரி-தச்சூர் நெடுஞ்சாலையில் காலை 7:00 மணி முதல் இரவு 9 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது"

சென்னை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு, காட்டுப்பள்ளி ஆகிய இடங்களில் துறைமுகங்கள் உள்ளன. மின் நிலையம் மற்றும் கப்பல் கட்டும் நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. துறைமுகங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இப்பகுதியில் செயல்பட்டு வருவதால், கனரக வாகனங்கள் பொன்னேரி -தச்சூர்- மீஞ்சூர் சாலை வழியாக சென்று வருகின்றன. பல ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் இந்த சாலை வழியாக பயணிக்கின்றனர்.
இதேபோன்று மணலி, பாலூர் ஆகிய பகுதிகளில் உள்ள கண்டைனர் கிடங்குகளுக்கும் சுமார் 5000க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன. இதன் காரணமாக பொன்னேரி மற்றும் மீஞ்சூர் நகர்பகுதிகளில் கடும் போக்குவரத்தினர்கள் ஏற்படுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் வேலைக்கு சென்று வருபவர்களும், பள்ளி- கல்லூரி மாணவர்களும் கடும் பாதிப்படைகின்றனர். கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இனி டிராபிக்கே வராது! சென்னையில் இருந்து வெளியே போக புது சாலை - எந்த ரூட் தெரியுமா?
போக்குவரத்து நெரிசல்
மீஞ்சூர், காட்டுப்பள்ளி, அத்திப்பட்டு, மணலி பகுதிகளில் உள்ள நிறுவனங்களுக்கு சென்று வரும் வாகனங்கள், மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலை மற்றும் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை என ஆந்திரா மற்றும் வட மாநிலங்களுக்கு சென்று வர வசதியாக சாலைகள் உள்ளன. இருந்தும் சுங்க கட்டணம் செலுத்துவதை தவிர்க்கும் வகையில் கனரக வாகனங்கள், மீஞ்சூர் பஜார் மற்றும் மேட்டுப்பாளையம், பொன்னேரி வழியாக பயணிக்கின்றனர். இதனாலே இதுபோன்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கனரக வாகனங்கள் தடை
தொழில் நிறுவனங்களுக்கு சென்று வரும் கனரக வாகனங்கள் மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலையை பயன்படுத்தாமல், பொன்னேரி வழியாக வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதிக விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மாணவர்கள் நலன் கருதி, தச்சூர் பொன்னேரி மீஞ்சூர் சாலையில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. இரவு ஒன்பது மணி முதல் மறுநாள் காலை 7:00 மணி வரை இந்த வழித்தடத்தில் கனரக வாகனங்கள் பயணிக்க அனுமதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அபராதம் விதிப்பு
கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர எக்காரணத்தைக் கொண்டும் தச்சூர்- பொன்னேரி- மீஞ்சூர் சாலையில் செல்வதும் ஓரங்களில் நிறுத்தவும் கூடாது. அவ்வாறு தடை செய்யப்பட்ட நேரத்தில் நிறுத்தப்பட்டால், காவல்துறை வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும் தடையை மீறும் கனரக வாகனங்களுக்கு, மோட்டார் வாகன சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்து 1500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





















