2021 சட்டமன்ற தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல்களா..? இபிஎஸ் மீதான வழக்கு இன்று விசாரணை..!
அவசர கதியில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போது வேட்பு மனுவில் தனது சொத்து விவரங்களை மறைத்ததாக தேனி மாவட்டத்தை சேர்ந்த மிலானி என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அவரது அசையும் அசையா சொத்துக்கள், தொழில் வருமானங்களுக்கான ஆவணங்களில் பொய்யான தகவலை கூறியுள்ளார். விவசாய நிலங்கள் இல்லை எனக் கூறியுள்ளார். நில வழிகாட்டி மதிப்பை காட்டிலும் சொத்து மதிப்பை குறைத்து காட்டியுள்ளார்.
இதேபோல் பிஎஸ்.சி படித்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் படிப்பை முடிக்கவில்லை. எனவே இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தவறானது எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் புகார் தரார் அளித்த தகவலின் அடிப்படையில் சாட்சியாக ஓபிஎஸ் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. புகார்தாரர் அளித்த 1,338 பக்க ஆவணங்களின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கை விசாரித்த சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், இந்த புகார் குறித்து விசாரணை நடத்தவும், வழக்குப்பதிவு செய்யவும் சேலம் குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ’ எங்கள் தரப்பில் அளிக்கப்பட்ட வேட்புமனுவில் எந்த தவறும் இல்லை. மேலும், புகார்தாரார் மிலானி எடப்பாடி சட்டமன்ற தொகுதியை சேர்ந்தவரோ அல்லது தேர்தலில் போட்டியிட்டவரோ அல்ல. எனவே, இந்த புகார் விசாரணைக்கு உகந்தது கிடையாது. கிட்டதட்ட ஓராண்டுக்கு பிறகு இந்த புகார் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. எனவே, இதை கருத்தில் கொள்ளாமல் சேலம் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டது தவறு” என குறிப்பிடப்பட்டு இருந்தது.
தொடர்ந்து, சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், ‘ மே 26ம் தேதிக்குள் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் செய்தனர்’ என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, அவசர கதியில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அப்போது ஒரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், ‘ காவல்துறையினர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கில் விசாரணையை ஜூன் 6ம் தேதி (இன்று) நீதிபதிகள் தள்ளி வைத்தனர். அதன்படி, இந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.