புற்றுநோயால் பாதிப்பு....சிகிச்சைக்காக தமிழ்நாடு வந்த வங்கதேச பெண் நடுவானில் உயிரிழந்த சோகம்
டாக்காவில் இருந்து, விமானத்தில் வந்தவர், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென நெஞ்சுவலியால், விமானத்தில் உயிரிழப்பு.
வங்காள தேசத்தை சேர்ந்த பெண், புற்றுநோய் சிகிச்சைக்காக கணவருடன், டாக்காவில் இருந்து, விமானத்தில் வந்தவர், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென நெஞ்சுவலியால், விமானத்தில் உயிரிழந்தார்.
வேலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக
வங்காள தேசத்தை சேர்ந்தவர் முகமது அபு. இவருடைய மனைவி குர்ஸிதா பேகம் (43). இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதை அடுத்து வங்காள தேசத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் குர்ஸிதா பேகம் சிகிச்சை பெற்றார். ஆனால் நோய் குணமடையவில்லை. இந்த நிலையில் இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள, வேலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக முகமது அபு, தனது மனைவி குர்ஸிதா பேகத்தை அழைத்துக் கொண்டு, வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து, யு எஸ் பங்களா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், நேற்று மாலை, சென்னைக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர்.
சென்னை விமான நிலையத்தில் மருத்துவ குழுவை தயார் நிலையில்
விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது, குர்ஸிதா பேகத்திற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு துடித்தார். இதை அடுத்து, கணவர் பதற்றத்துடன் விமான பணிப்பெண்களிடம் கூறினார். அவர்கள் விமானிக்கு தகவல் கொடுத்தனர். உடனே விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, சென்னை விமான நிலையத்தில் மருத்துவ குழுவை தயார் நிலையில் வைக்கும்படி கூறினார்.
வழக்கு பதிவு செய்து விசாரணை
இந்தநிலையில் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும், மருத்துவ குழுவினர், விமானத்திற்குள் ஏறி, பரிசோதித்தனர். ஆனால் குர்ஸிதா பேகம் தனது இருக்கையிலேயே உயிரிழந்திருந்தார். இதையடுத்து சென்னை விமான நிலைய போலீசார் விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு 174 பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்