One year of lockdown - முழுமையாக கிடைக்காத புலம்பெயர் தொழிலாளர் தரவுகள்.. நிபுணர்கள் பரிந்துரை என்ன?
கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டு ஒரு வருடம் முடிந்துவிட்டது. இந்த பொதுமுடக்க காலத்தில் பெரும் பாதிப்புக்குள்ளான புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த தரவுகள் இன்னும் வெளியாகவில்லை.
கடந்த வருடம் மார்ச் 24-ஆம் தேதி, அடுத்த நாளில் இருந்து கொரோனா லாக்டவுன் கடைபிடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில், ”புலம்பெயர் தொழிலாளர்கள், தங்களின் வேலைக்காக தொடர்ச்சியாக வெவ்வேறு வேலைகளுக்கு இடம்பெயர்ந்து கொண்டிருப்பதால், அவர்களைக் குறித்த தரவுகளைச் சேகரிப்பதும், ஆவணங்களும் கிடைப்பது சாத்தியமாக இல்லை” என மத்திய அரசு தெரிவித்தது. அதற்கடுத்த முழுமையான 68 நாள் லாக்டவுன் காலமும் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுபவித்த துயரங்களுக்கு ஏராளமான சாட்சிகள் பதிவாகின. புலம்பெயர் தொழிலாளர்களுக்கான கொள்கையை வரைவுபடுத்த, அவர்களின் எண்ணிக்கை மற்றும் தரவுகள் மிக முக்கியமானவை.
மார்ச் 25, 2020 முதல் மே 1, 2020 வரை, உணவு, தங்கும் வசதி, வேலை, போக்குவரத்து வசதி என எதுவுமில்லாமல் தனித்து விடப்பட்டனர். 1.14 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் (உத்தராகண்ட் மக்கள்தொகையை விட அதிகமான எண்ணிக்கை) தங்களின் சொந்த ஊர்களை நோக்கிச் செல்லும் முயற்சியில், 971 பேர் தொற்று அல்லாதவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 96 தொழிலாளர்கள் ரயில் பயணத்தில் உயிரிழந்தவர்கள்.
நிபுணர்களின் பரிந்துரைகள் என்ன?
முழுமையாக நம்பகமான தரவுகள் இன்னும் அரசால் தெளிவுபடுத்தப்படாத நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான கொள்கையை வரையறுக்கும் முயற்சிக்காக, India Spend நேர்காணல் செய்த புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான செயற்பாட்டாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
1. அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், இந்தியா முழுவதும் கிடைக்கக்கூடிய வகையில் சமூக பாதுகாப்புத் திட்டங்களின் பலன்கள் சென்றடைய வேண்டும்.
2. வேலைவாய்ப்பு வழங்குபவர்கள், தாங்கள் அளிக்கும் பணி நிபந்தனைகள், உறுதிகளுக்கு பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டும்.
3. தொழிலாளர் சட்டங்களில் விதிமீறல் நிகழக்கூடாது. விதிமீறல் ஏற்படுமாயின் தொழிலாளர்களுக்கான நீதிக்கான வழிகள் ஏற்படுத்தித் தரப்படவேண்டும்.
4. புலம்பெயர் தொழிலாளர்களின் கொள்கைகளைப் பொறுத்தவரை, அவர்களுக்கான குடியிருப்பு கட்டமைப்புகள், மத்திய மாநில அரசுகளின் நலத்திட்டங்களை கிடைப்பதை உறுதிசெய்யும் அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
5. புலம்பெயர் பெண் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகளின் நலங்களுக்கான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.