`GOAT என்றால் ஆடு இல்லை!’ - மாணவர்கள் கிண்டல் என நினைத்த ஆசிரியர்.. பெருமிதம் கொள்ள வைத்த மாணவர்கள்!
சமீபத்தில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குக் கணிதம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் தன் மாணவர்கள் தன்னை `goat' என்று அழைப்பதால் கவலை கொண்டுள்ளார்.

பெரும்பாலான பள்ளிக் குழந்தைகளுக்குக் கணிதப் பாடம் என்பது கசப்பாக இருக்கலாம். எனவே பெரும்பாலும் மாணவர்களின் மனதில் கணிதப் பாட ஆசிரியர்களின் மீது அச்சமும் ஏற்படலாம்.
இந்நிலையில், சமீபத்தில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குக் கணிதம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் தன் மாணவர்கள் தன்னை `goat' என்று அழைப்பதால் கவலை கொண்டுள்ளார். மேலும், ரெட்டிட் தளத்தில் தன் மாணவர்கள் ஏன் தன்னை `goat' என்று கிண்டல் செய்கிறார்கள் என்பதைக் கேள்வியாக எழுப்ப, அதில் வந்த பதில்களைப் பார்த்து தன் மாணவர்கள் தன்னைக் கிண்டல் செய்யவில்லை என்பதும், தன்னைப் புகழ்ந்துள்ளனர் என்பதும் தெரிந்து பெருமிதம் கொண்டுள்ளார்.
PuzzleBrain20 என்ற பெயரில் ரெட்டிட் தளப் பயனாளர் ஒருவர் குழு ஒன்றில், `என் மாணவர்கள் ஏன் என்னை `goat' என்று அழைக்கின்றனர்?’ எனக் கேள்வி எழுப்பியிருந்தார். பலரும் இதில் கமெண்ட்களில் பதிலளித்ததில், அவரது மாணவர்கள் அவரை “Greatest Of All Time” என்று அழைப்பதைச் சுருக்கமாக `Goat' என்று கூறுவதாகத் தெரிவித்துள்ளனர்.

கடந்த கல்வியாண்டு முழுவதும் தன் பள்ளியில் தனது மாணவர்கள் தன்னை `Goat' என்றே அழைப்பதாகவும், தன் மாணவர்கள் தன்னை எப்போதெல்லாம் அவ்வாறு அழைக்கிறார்களோ அப்போதெல்லாம் அவர்களிடம் `நீங்கள் தான் goat' என்று சொல்ல, மாணவர்களிடம் சிரிப்பு மட்டுமே பதிலாக வரும் எனவும் இந்த ஆசிரியர் தனது ரெட்டிட் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Everything’s terrible except for this teacher going on Reddit and learning how much her students love her pic.twitter.com/JvDyXT8czt
— Robert Maguire (@RobertMaguire_) June 28, 2022
தனது பதிவில் கணித ஆசிரியர், `உண்மையில் இது சிரிப்பாக இருந்ததால், அதுகுறித்து நான் பெரிதாக சிந்திக்கவில்லை. எனக்கு புரியாத ஜோக்கை இத்தனை நாள்களாக நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன் என்பதை சமீபத்தில் உணர்ந்தேன். என் மாணவர்களோடு எனக்கு நல்ல உறவு உண்டு. மேலும், அனைவரும் நல்ல குழந்தைகள். எனவே அவர்கள் என்னைக் கிண்டல் செய்கிறார்கள் என்று நான் நம்பவில்லை’ எனக் கூற, அதன்பிறகு பல பயனாளர்கள் அதனை விளக்கிக் கூறியுள்ளனர்.
தன் மாணவர்கள் தன்னை நீண்ட நாள்களாகப் பாராட்டி வருவதை உணர்ந்த கணித ஆசிரியர் உணர்ச்சிப் பெருக்கால் பெருமிதம் அடைந்துள்ளார். தொடர்ந்து அவர், `ஓ மை காட்! நான் தற்போது கண்ணீருடன் இருக்கிறேன்.. இத்தனை நாள்களாக அவர்கள் என்னைப் பாராட்டி வந்திருக்கிறார்கள் என்பதை நம்பவே முடியவில்லை.. என் கேள்விக்குப் பதிலளித்தோருக்கு நன்றிகள்’ எனக் கூறியுள்ளார்.
இந்த ரெட்டிட் தளப் பதிவு பல்வேறு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.






















