World Consumer Rights Day 2023 : உலக நுகர்வோர் தினம் இன்று; தெரிந்துகொள்ளவேண்டியவை என்னென்ன?
World Consumer Rights Day 2023 : உலக நுகர்வோர் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
உலக நுகர்வோர் தினம்
நுகர்வோர் உரிமைகளைக் காத்திடவும் விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் ஆண்டுதோறும் மார்ச்,15 ஆம் தேதி ‘உலக நுகர்வோர் தினம்’ கொண்டாடப்படுகிறது. நுகர்வு என்பது, அதை சார்ந்தவர்கள், விற்பனையாளர் உள்ளிட்டோட்ரை உள்ளடக்கியது.
வரலாறு:
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கென்னடியின் (John Fitzgerald Kennedy's) அறிவிப்புக்குப் பிறகு, 1983-ம் ஆண்டு மார்ச் 15-ம் நாள் முதல் உலக அளவில் இந்தத் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1962 ஆம் ஆண்டு கென்ன்னடி நுகர்வோர் உரிமைகள் குறித்து பேசிய முதல் உலகத் தலைவர். இவர் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாத்திட சட்டம் இயற்றினார். நுகர்வோர் பாதுகாப்பு, அடிப்படை உரிமை,தகவலறியும் உரிமை ஆகியவற்றை குறித்து பேசினார். எந்த பொருளை வாங்குவது என்பது நுகர்வோரில் உரிமை என்பதை வலியுறுத்தினார். மேலும், அவர்கள் சந்தையில் நிலவும் போட்டிக்கு பலியாகிவிடக் கூடாது என்பது குறித்தும் பேசினார். நுகர்வோர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார். இது குறித்து கென்னடி பேசிய இருபதாண்டுகளுக்கு பிறகு, நுகர்வோர் தினம் கடைப்பிடிக்கும் வழக்கம் தொடங்கியது.
யார் நுகர்வோர்?
இந்த உலகில் எல்லாருமே நுகர்வோர்தான். அடிப்படை தேவைகளை நாம் விலை கொடுத்து வாங்குகிறோம்,இல்லையா? அப்படியெனில் வணிகம் இருக்கும் வரை ’நுகர்வு’ நீடித்திருக்கும். உலகமயமாக்கல் ஏற்பட்ட பிறகு சந்தைப்படுத்துதல் அதிகரிக்க தொடங்கிவிட்டது. வணிக சந்தை போட்டி மற்றும் விளம்பர உலகில் நவீனத்துவம் உள்ளிட்டவைகளால் நுகர்வு கலாச்சாரத்திலிருந்து ஒருவரால் விலகிவிடவே முடியாது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. எது தேவை, தேவையில்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ளவே இப்போது நேரமில்லாத சூழல்.
விளம்பரம், சமூக வலைதளங்கள் ஆகியவற்றினால் நமக்கு எது தேவை என்பதையே நிர்ணயிக்க முடியாமல், நமக்கே தெரியாமல் நுகர்வோர்களாக மாறிவிடுவோம். அன்றாட வாழ்க்கையில் தேவை இருக்கும் வகையில் நுகர்வு இருக்கும். ஆனால், நாம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டியதன் அவசியத்தையும் உணரவே ‘நுகர்வோர் தினத்தன்று’ விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இந்தியா - தேசிய நுகர்வோர் தினம்:
இந்தியாவில் 1986-ஆம் ஆண்டு டிசம்பர் 24-இல் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் டிசம்பர் 24-ம் தேதி தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டின் கருப்பொருள்:
காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை உலகமே உணர தொடங்கி வரும் நிலையில், இந்தாண்டிற்கான கருப்பொருளாக ’க்ளீன் எனர்ஜி மாற்றங்கள் மூலம் நுகர்வோரை மேம்படுத்துதல்’ (‘Empowering consumers through clean energy transitions’) என்பதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முக்கியத்துவம் மற்றும் கவனிக்க வேண்டியவை:
கலப்படம், போலியான பொருட்கள் உள்ளிட்டவைகளுக்கு நுகர்வோர் ஏமாந்துவிடக்கூடாது என்பதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.
மார்க்கெட்டிங் மற்றும் இன்ஸுரன்ஸ், சொத்து உள்ளிட்டவைகளை வாங்கும்போது கவனமுடன் இருக்க வேண்டும். அதோடு நுகர்வோர் என்பது விற்பனையாளரிடம் வாங்கும் பொருள் குறித்த தகவல்களை அனைத்தையும் கேட்டறிந்து கொள்ள வேண்டும். தயாரிப்பு தொடர்பான தகவல்கள், லைசன்ஸ் போன்றவற்றை தெரிந்துகொள்ள வேண்டும். அப்படி, விற்பனையாளர்கள் சரியான வணிகத்தில் ஈடுபடவில்லை என்றால், நுகர்வோர் புகாரளிக்க வேண்டும். நுகர்வோருக்கு 'Procduct' தொடர்பான எல்லா தகவல்களையும் தெரிவிக்க வேண்டியது ஒரு விற்பனையாளனின் கடைமை என்றும், அதை தெரிந்துகொள்ள வேண்டியதும் நுகர்வோர் உரிமை என்றும் கென்னடி நுகர்வோர் உரிமைகளில் முக்கித்துவம் வாய்ந்தவகைகளில் ஒன்றாக குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல, சந்தையில் இருக்கும் பல்வேறு ப்ராண்டுகளில் எதை பயன்படுத்த வேண்டும் என்பது நுகர்வோரின் உரிமையாகும். போட்டி நிறைந்த சந்தை உலகில் அவர்களுக்கு ஏற்ற விலை அடிப்படையில் வாங்கும் உரிமை இருக்கிறது. போலவே, நுகர்வோ உரிமைகள் குறித்த கல்வியும் அவசியமானதாகும். இன்றைய நாளில் ஏமாறாமல் ஒரு பொருளை வாங்கிடவும், நுகர்வோர் உரிமைகள் குறித்தும் தெரிந்துகொண்டு செயல்படுவோம்.