‘மச்சி ஒரு டிரிப் போலமா?' - ஏழாவது சொர்க்கம் வால்பாறை பயணம்!
ஊரடங்கில் முடங்கியவர்களுங்கு வாசிப்பின் வழியே ஊர் சுற்றி வந்த அனுபவத்தையும், வருங்காலத்தில் ஊர் சுற்ற விரும்புபவர்களுக்கு வழிகாட்ட பார்த்து ரசித்த இடங்களின் பிரமிப்பையும், வியந்த மனிதர்களின் மனிதத்தையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு தொடர் தான், 'மச்சி, ஒரு டிரிப் போலமா?'
வலி, கோபம், வெறுமை, ஏமாற்றம், சோகம், வருத்தம், அவமானம், வேலைப்பளு, விரக்தி, இப்படி நம்மை முடக்கிப் போடும் காரணிகள் ஆயிரம். சுற்றிச்சுற்றி வரும் இவை அனைத்திற்குமான ஒரே தீர்வு பயணம்.
"மச்சி, ஒரு டிரிப் போலமா?" இந்த வார்த்தைகளை எப்போது கேட்டாலும் ஒரு நல்ல டீ குடித்தது போன்ற புத்துணர்வு மனதிற்கு வந்துவிடும். துள்ளிக் குதித்து மனம் மலைப்பாதைகளிலும், அடர் காடுகளிலும் சுற்றத் துவங்கி விடும். ஒரு பயணம் மன நிம்மதியையும், புத்துணர்வையும், நம்பிக்கையையும், புதிய வழிகாட்டல்களையும் தரும் வல்லமை கொண்டது. அதனால் தான் என்னவோ மனம் பயணங்களின் மீது தீராக் காதலைக் கொண்டிருக்கிறது.
பைக்கினை நல்ல நண்பர்களாக நினைப்பவர்களுக்கு வேறு யாரும் தேவையில்லை. தனிமையிலே இனிமை காண கிளம்பி விடுவார்கள். ஆனால் அது பலருக்கும் செட் ஆகாது. ஒத்தக் கருத்து கொண்ட ஒரு நண்பர் அமைந்து விட்டால் போதும். அதை விட வேறு என்ன வேண்டும்?. வண்டியை கிளப்பி விட வேண்டியது தான்.
டீ குடிக்க ஊட்டிக்கும், காபி குடிக்க கூர்க்கிற்கும், அல்வா சாப்பிட திருநெல்வேலிக்கும், புரோட்டா சாப்பிட விருதுநகருக்கும் வண்டியை கிளப்புபவர்கள் உண்டு. இப்படி ஊர் ஊராக சுற்றிய ஊர்ச்சுற்றிகளை, நான்கு சுவர்களுக்குள் ஊரடங்கு முடக்கிப் போட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்புகளை கேட்கும் போது எல்லாம், மனம் துவண்டு விடுகிறது. வெறுமையும், வருத்தமும் கூடுகிறது. எப்போது ஊரடங்கை முடித்து, வண்டியை கிளப்பலாம் என மனம் ஏங்கித் தவிக்கிறது. ஊரடங்கில் முடங்கியவர்களுங்கு வாசிப்பின் வழியே ஊர் சுற்றி வந்த அனுபவத்தையும், வருங்காலத்தில் ஊர் சுற்ற விரும்புபவர்களுக்கு வழிகாட்ட பார்த்து இரசித்த இடங்களின் பிரமிப்பையும், வியந்த மனிதர்களின் மனிதத்தையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு தொடர் தான், 'மச்சி, ஒரு டிரிப் போலமா?'
ஏழாவது சொர்க்கம் வால்பாறை
கோவையில் இருந்து நூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, வால்பாறை. மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கையின் ஏழில் கொஞ்சும் வால்பாறை, ஏழாவது சொர்க்கம் என அழைக்கப்படுகிறது. பொள்ளாச்சி நகரை கடந்து ஆழியார் அணைக்கு மேலே 40 கொண்டை ஊசி வளைவுகளில் வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையில் வால்பாறைக்கு பயணிக்க வேண்டும். இப்பாதை டூவிலர் ரைடர்களுக்கு அற்புதமான அனுபவமாக இருக்கும்.
வெயிலுக்கு இதமாக கவியருவி எனப் பெயர் மாற்றப்பட்டுள்ள குரங்கு அருவியில் ஒரு குளியலைப் போட்டு பயணத்தை துவக்கலாம். ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில் ஆழியார் அணையின் மொத்த அழகையும் கண்டு இரசிக்கலாம். மலைப்பாதைகளில் ஏறினால் நமது ஊரில் ஆடு, மாடு மேய்வதைப் போல ஆங்காங்கே வரையாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும். நாட்டின் தேசிய விலங்கு புலி எனத் தெரிந்த பலருக்கும், தமிழ்நாட்டின் மாநில விலங்கு வரையாடு என்பதை தெரிந்திருப்பதில்லை. அருகி வரும் வரையாடுகள் ஆபத்தான மலைச்சரிவுகளில் அசல்ட்டாக ஏறியிருக்கும்.
அவற்றை இரசித்த படியே கடந்தால், தேயிலைக் காடுகளுக்கும், வனத் தோட்டங்களுக்கும் ஊடாக பாதை செல்லும். சாலையை மூடி நிற்கும் வெண்ணிற மேகங்களும், இதமான குளிர் காற்றும் வரவேற்கும்.
ஊட்டி, கொடைக்கானலைப் போல வால்பாறை பெரிய சுற்றுலா தலம் அல்ல. இருப்பினும் கருமலை பாலாஜி கோவில், கூழாங்கல் ஆறு, நல்லமுடி பள்ளத்தாக்கு, அட்டக்கட்டி காட்சி முனை, சோலையாறு அணை, நீராறு அணை உள்ளிட்டவை நல்ல அனுபவங்களை தரக்கூடும். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரந்து விரிந்து பசுமை போர்த்தியது போலிருக்கும், மலைத்தொடர்களும், காடுகளும் ரம்மியமாக காட்சி தரும். பார்க்க அழகாகத் தெரியும் தேயிலைத் தோட்டங்களுக்குள் காடுகளின் பெரும் அழுகையும், தொழிலாளர்களின் இரத்தமும் புதைந்து கிடக்கின்றன.
வால்பாறை வன விலங்களின் புகலிடம். மனித நடமாட்டம் குறைவான பகுதி. எனவே அவ்வப்போது காட்டு யானை, காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகளை பார்க்க முடியும்.
அக்காமலை புல்வெளிக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளனர். தொலைவில் நின்று பார்க்க மட்டுமே முடியும். வால்பாறை வழியாக இந்தியாவின் நயாகரா என அழைக்கப்படும் அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சிக்கு செல்ல முடியும். குறைவான கட்டணத்தில் வால்பாறையில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கலாம். வால்பாறை சுற்றுலா பெரிய செலவுகளை வைக்காது.
கொஞ்சும் ஏழில் பொங்கும் வால்பாறை சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சொர்க்கம் தான்!.
(பயணங்கள் முடிவதில்லை)